முதல் 2 வாரம் படத்தை விமர்சிக்கக் கூடாது; FDFS ரிவ்யூவுக்கு நோ; திருப்பூர் சுப்ர...
TVK: "அதிமுகவுடன் கூட்டணியா?" -'த.வெ.க' பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம்
'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் கூட்டணியை வரவேற்று பேசியதிலிருந்து விஜய் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார், அவருடன் யார்யார் கைகோர்க்கப் போகிறார்கள் என்பதுதான் அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.
சீமான் 'த.வெ.க' வுடன் கூட்டணி இல்லை என்று கடுமையான விமர்சித்துப் பேசியிருந்தார். 'வி.சி.க' தலைவர் திருமாவும் 'தி.மு.க' வுடன் தான் கூட்டணி என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். இதற்கிடையில் 'த.வெ.க' முதல் மாநாட்டில் 'தி.மு.க' வை அரசியல் எதிரியாக அறிவித்த விஜய், 'அ.தி.மு.க'வைப் பற்றி எதுவும் பேசவில்லை. இதனால், 'அ.தி.மு.க'வினர் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றுப் பேசியிருந்தனர். இதையடுத்து விஜய், வரும் 2026 தேர்தலில் 'அ.தி.மு.க'வுடன் கூட்டணி வைக்கப்போவதாகப் அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டன.
இந்த 'அ.தி.மு.க; கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுகுறித்து 'த.வெ.க' பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 'அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வரும் செய்திகள் பொய்யானது' என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து வெளியாகியிருக்கும் அந்த அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...