செய்திகள் :

TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள்

post image

'காணாமல் போன தவெக!'

கரூர் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் தவெக தலைவர் விஜய் வெளியில் வரவில்லை. கரூருக்கு சென்று இரங்கல் கூட்டம் நடத்தப்போவதாகச் சொல்லி காவல்துறையிடம் அனுமதிக் கடிதமும் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னமும் கரூருக்கும் செல்லவில்லை. தவெக தரப்பிலிருந்து யாருமே அதிகாரப்பூர்வமாக இன்னமும் எந்த பேட்டியையும் கொடுக்கவில்லை.

TVK Vijay
TVK Vijay | த.வெ.க - விஜய்

செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு 7:30 மணியோடு ஷட் டவுன் ஆன கட்சி இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. புதிதாக கட்சி தொடங்கிய உச்ச நடிகர் என்பதால், விஜய் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடியது. ஆனால், இந்த கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் கட்சியின் கட்டமைப்பு குறித்து தீவிரமான கேள்விகள் எழுவதை தவிர்க்கவே முடியவில்லை. தவெகவின் கட்சிக் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் சார்ந்து எழும் 5 கேள்விகள் இங்கே!

முதலில் மா.செக்களை நியமியுங்கள் விஜய்!

ஒரு சில நாட்களுக்கு முன்பு, தான் அடுத்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக கிளைக் கழக நிர்வாகிகள் வரைக்கும் அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகள் நியமனத்தை முடித்திருக்க வேண்டுமென விஜய் உத்தரவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இந்தத் தகவலே முன்னுக்குப் பின் முரணானதாக இருக்கிறது. ஏனெனில், கடந்த ஜூலை 30 ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை செயலி என 'MY TVK' என்ற ஒரு ஆப்பை விஜய் வெளியிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
TVK Vijay

அந்த நிகழ்வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், 'பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உட்பட 2,95,980 நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமித்திருக்கிறோம். இதில் 1,89,750 கிளை/ வார்டு நிர்வாகிகளும் அடக்கம்.' என பெரிய கட்சிகளுக்கு ஈடாக நாமும் கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டதாக மா.செக்கள் மத்தியில் பெருமிதமாகப் பேசியிருந்தார். எனில், விஜய் எந்தெந்த மாவட்டங்களில் எங்கே கிளைக் கழக நிர்வாகிகளை நியமிக்கச் சொல்கிறார்? மா.செக்களுக்கு உத்தரவிடுவது இருக்கட்டும். முதலில் நீங்கள் முழுமையாக மா.செக்களை நியமியுங்கள் விஜய்.

கடந்த ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் தவெகவின் மா.செக்களை விஜய் அறிவித்தார். கட்சி நிர்வாக ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாகக் கூறியிருந்தார். அதன்படி, பொங்கலுக்கு முன்பாகவே பொதுச்செயலாளர் ஆனந்த் பனையூரில் உட்காந்து எல்லா மாவட்டப் பொறுப்பாளர்களையும் அழைத்துப் பேசி பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்து ஒரு மா.செக்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டார். அப்போதே ஒரு சில மாவட்டங்களின் பஞ்சாயத்துகளை அவராலயே தீர்க்க முடியவில்லை.

TVK Vijay | த.வெ.க - விஜய்
TVK Vijay | த.வெ.க - விஜய்

க்ளியர் ஆன மாவட்டங்களை மட்டும் வைத்து ஒரு நாளுக்கு19 மா.செக்கள் என நியூமராலஜிப்படி விஜய்யும் அறிவித்துவிட்டார். மா.செக்களுடன் புகைப்படம் எடுத்து வெள்ளி நாணயம் கொடுத்து விருந்தளித்து அனுப்பி வைத்தார். கடைசியாக ஏழாம் கட்டமாக கடந்த ஜூன் இரண்டாம் வாரத்தில் 6 மா.செக்கள் கொண்ட ஒரு பட்டியலை விஜய் அறிவித்தார். அவர் சொன்னபடியே 120 மா.செக்களை விஜய் அறிவித்துவிட்டார். ஆனால், கட்சி ரீதியாக மா.செக்கள் இல்லாத மாவட்டங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தை அப்படியே மறந்துவிட்டார்கள். அந்த மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகள் இருக்கின்றன. ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ என அறிவிக்கிறார்கள்.

TVK Vijay
TVK Vijay

எனில், தூத்துக்குடியில் குறைந்தபட்சமாக மூன்று அல்லது நான்கு மா.செக்களை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், ஒருவரை கூட அறிவிக்கவில்லை. காரணம், கோஷ்டி மோதல். ஒரு பெண் நிர்வாகி தலைமையிலான கோஷ்டி ஆனந்திடம் இன்னமும் போஸ்டிங்குக்காக போராடிக் கொண்டிருக்கிறது. அதேசமயத்தில், ஒரு தொழிலதிபர் தலைமையிலான கோஷ்டி அறிவிக்கப்படாமலேயே மாவட்டச் செயலாளர் என போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு கோஷ்டிக்கும் இடையே ஓராண்டுக்கு மேல் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைக்க வேண்டிய ஆனந்த் தூத்துக்குடி ஃபைலை அப்படியே ஓரங்கட்டிவிட்டார்.

மதுரை பாரபத்தியில் விஜய் மாநாடு நடத்தினார் இல்லையா? விஜய் மாநாடு நடத்திய அந்த பாரபத்தி, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இன்னமும் மா.செ கிடையாது. மதுரையில் திருப்பரங்குன்றத்தையும் திருமங்கலத்தையும் தொடாமலேயே விட்டுவிட்டார்கள். சென்னையிலும் ஒன்றிரண்டு தொகுதிகளை அப்படியே விட்டுவிட்டார்கள். மதுரையில் அறிவிக்கப்பட்ட மா.செக்களுடன் விஜய் மேடையில் அமர்ந்திருக்க, இந்த பஞ்சாயத்து கோஷ்டியெல்லாம் மேடைக்கு முன்பாக கீழே சேர் போட்டு அமர்ந்திருந்தது. அதெல்லாம் விஜய்க்குத் தெரியுமா இல்லையா என்பதே யாருக்கும் தெரியாது. கட்சிக்கு இன்னும் முழுமையாக மா.செக்களை கூட அறிவிக்காமல்தான், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்!' என விஜய் கோட்டை கனவு கண்டுகொண்டிருந்தாரா என்பதே அரசியலை உற்றுநோக்குபவர்களின் கேள்வி.

TVK Vijay
TVK Vijay

பூத் கமிட்டி கூட்டங்கள் எங்கே?

கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மேடையில், 'தேர்தலை சந்திப்பதற்கு பூத் கமிட்டி ஏஜென்ட்டுகள்தான் ரொம்பவே முக்கியம். கூடிய சீக்கிரம் பெரிய கட்சிகளே ஆச்சர்யப்படும் அளவுக்கு பூத் கமிட்டி மாநாட்டை தவெக நடத்தும்.' என விஜய் அறிவித்தார். அதன்படி அறிவிக்கப்பட்ட மா.செக்களை பூத் கமிட்டி உறுப்பினர்களை சீக்கிரம் சேர்த்து முடிக்குமாறும் உத்தரவிட்டார். ஏப்ரலில் கோயம்புத்தூரில் கொங்கு மண்டலத்தின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டத்தையும் இரண்டு நாட்கள் நடத்தியிருந்தார். 'நம்முடைய கட்சியின் மீதான நம்பிக்கையை நீங்கள்தான் வளர்த்தெடுக்க வேண்டும். தவெகவின் முதுகெலும்பு நீங்கள்தான்!' என பூத் கமிட்டி முகவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விஜய் பேசினார். அவ்வளவுதான்.

TVK Vijay
TVK Vijay | த.வெ.க - விஜய்

அத்தோடு பூத் கமிட்டி என்கிற செட்டப்பையே மறந்துவிட்டார்கள். 5 மண்டலங்களில் பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஒப்புக்கு கோயம்புத்தூரில் மட்டும் கூட்டத்தை நடத்திவிட்டு மற்ற மண்டலங்களை மறந்துவிட்டார்கள். கோயம்புத்தூரிலுமே மா.செக்கள் கையில் அந்தந்தத் தொகுதிகளுக்கான பூத்வாரியாக இதுவரையிலான எலெக்சன் ரிசல்ட் அடங்கிய ஒரு ஃபைலையும் பென் ட்ரைவையும் மட்டும்தான் கொடுத்தார்கள். மற்றபடி வாக்காளர்களை ஈர்க்கவும், வாக்குச்சாவடிகளில் சூதானமாக நடந்துகொள்ளவும் எந்த யுக்தியையும் முகவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

தமிழகம் முழுக்க 68,469 பூத் கமிட்டி முகவர்களை நியமித்துவிட்டதாக அறிவித்தார்கள். பூத்துக்கு ஒரு முகவரை வைத்துக்கொண்டு பெரிய கட்சிகள் வியப்படையும் அளவுக்கு மாநாட்டை நடத்துவோம் என விஜய் எப்படி கூறினார் என இன்றுவரை தெரியவில்லை. திமுக, அதிமுகவில் குறைந்தது ஒரு பூத்துக்கு 10 பேராவது பணியில் இருப்பார்கள். வாக்காளர் பட்டியலில் இத்தனை வாக்காளர்களுக்கு ஒருவர் என பொறுப்பேற்றுக் கொள்வார்கள். டிஜிட்டலில் வாக்காளர்களை கவரும் வண்ணம் டிஜிட்டல் பூத் ஏஜெண்டுகளை நியமித்து திமுகவும் அதிமுகவும் வேலை செய்துகொண்டிருக்கிறது. களம் இப்படியிருக்க பூத்துக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்துவிட்டு, அவர்களுக்கும் முழுமையாக கூட்டங்களை நடத்தாமல் கிடப்பில் போட்டிருக்கும் தவெக இன்னுமே யதார்த்தத்தை உணரவில்லை.

TVK Vijay
TVK Vijay

சொன்னீங்களே; செஞ்சீங்களா?

கட்சி சார்ந்து ஒரு நான்கைந்து உயர்மட்ட நிர்வாகிகளுடன் மட்டுமேதான் விஜய் தொடர்பில் இருக்கிறார். நியமன ஆணையை வழங்கி புகைப்படம் எடுக்கையில் ஒவ்வொரு மா.செவிடம் சில நிமிடங்கள் தனியாக பேசியிருக்கிறார். அதன்பிறகு, எந்த மாவட்டச் செயலாளரையும் கட்சியின் செயல்பாடுகள் சார்ந்து நேரில் அழைத்து பேசுவதே கிடையாது. தவெக எனும் கட்சி அவருடையதுதான். எளியவர்களை மா.செக்களாக நியமித்திருக்கிறோம் என பெருமிதப்பட்டுக் கொள்வார். ஆனால், அந்த எளிய மா.செக்கள் தங்களின் கட்சித் தலைவரை நேரில் சந்தித்து பிரச்னைகளை பேச நினைத்தால் அதற்கான வாய்ப்பு அங்கே கிடையவே கிடையாது.

மாவட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் கூட கூட்டத்தில் முண்டியத்துக் கொண்டு 'தலைவா...தலைவா...' என கத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும். ரசிகர் மன்றமாக இருந்த போதிலிருந்தே விஜய்யுடன் பயணிக்கும் நிர்வாகிகளுக்கே அதுதான் நிலைமை. 'MY TVK' ஆப் வெளியீட்டின் போது, மாவட்டச் செயலாளர்களின் பணியை பார்த்துவிட்டு ஒவ்வொரு திங்கட் கிழமையும் தலைவரே மா.செக்கள் முதல் பூத் முகவர் வரை நேரில் தொடர்புகொண்டு பேசுவார்.' என ஆதவ் அர்ஜூனா மேடையிலேயே கூறினார். அப்போதிருந்து கரூர் சம்பவத்துக்கு முன்பு வரை 8 திங்கள் கிழமைகள் ஓடிவிட்டன. தலைவரே நம்முடைய பணிகளை பார்த்துவிட்டு அழைத்துப் பாராட்டுவார் எனக் காத்திருந்த நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அந்தக் கட்சியின் நிர்வாகிகளே பொதுக்கூட்டங்களின் போது மட்டும்தான் விஜய்யை பார்க்க முடியுமெனில், அவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்தும் வேலையிலெல்லாம் ஈடுபாடு காண்பிப்பார்களா?

இரண்டாம் கட்டத் தலைவர்களின் ஆப்சென்ட் :

கரூர் சம்பவத்துக்குப் பிறகு இப்போது வரைக்கும் தவெக தரப்பை விளக்கிப் பேச இரண்டாம் கட்டத் தலைவர்கள் என யாருமே அங்கே இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பேரும் வழக்குக்கு பயந்து தலைமறைவாகியிருந்தனர். தவெகவின் அடிப்படை கட்டமைப்பே ஜனநாயகத்தன்மை அற்றது. விஜய்யின் நட்சத்திரத்தன்மை மட்டுமே பிரதானமாக இருந்தால் போதுமென்ற நினைப்பில் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி அது. மேலும், அரசியலை எதோ புதிதாக சந்தைக்கு வந்த சோப்பு, ஷாம்பை விற்பதைப் போல பிராண்டிங்காக மட்டுமே அவரின் வியூகத் தரப்பு அணுகுகிறது. விஜய்யின் முகம் மட்டும்தான் தவெகவின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் வியூகம்.

'மக்கள் விரும்பு முதல்வர் வேட்பாளர் விஜய்!' என மதுரை மாநாட்டுக்கு முன்பாக ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அந்த வாசகத்தை முன்வைத்து நிர்வாகிகளும் துண்டுபிரசுரம் கொடுப்பது, வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் ஒரு நிர்வாகிகள் குழு விஜய்யோடு ஆனந்தும் இருப்பதைப் போல ஒரு ஸ்டிக்கரை எல்லா வீடுகளிலும் ஒட்டிவிட்டது. பனையூரின் வியூகத் தரப்பு டென்ஷனாகவே, மாலையில் அந்த ஸ்டிக்கரையெல்லாம் கிழித்துவிட்டு விஜய்யின் படம் மட்டுமே இருக்கும்படியான ஸ்டிக்கர்களை ஒட்டி அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதுதான் அவர்களின் அரசியல்.

TVK Vijay
tvk vijay

இப்படியொரு கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? திமுக, அதிமுகவில் அதிருப்தியாக இருந்த பலரும் தவெகவில் இணையும் பொருட்டு பனையூர் தரப்பைத் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால், விஜய்யை சுற்றியிருக்கும் அந்த நான்கைந்து பேர் அவர்களை சுற்றலில் விட்டு காலதாமதப்படுத்தி கடைசியில் வேறு கட்சிகளுக்கு அவர்கள் சென்ற கதையெல்லாம் நடந்திருக்கிறது. திமுக, அதிமுகவில் ஓய்வை எட்டி தற்போது செல்வாக்கே இல்லாமல் இருக்கும் ஒரு சில பேரை மட்டும்தான் இந்த இரண்டாண்டுகளில் தவெகவில் சேர்த்திருக்கின்றனர்.

TVK Vijay
TVK Vijay

'விஜய்யுடன் இருப்பவர்கள் கட்சியில் இணைவதற்காகச் செல்லும் எங்களை நடத்தும் விதம் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களைத் தவிர விஜய்யை யாரும் நெருங்கிவிடக்கூடாது என்கிற மனநிலையோடு குதர்க்கமாகத்தான் பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர்.' எனப் புலம்புகின்றனர் பனையூர் பக்கமாக காரைத் திருப்பத் தயாராக இருந்தவர்கள்.

கோட்டை விடும் வியூகத் தரப்பு:

விஜய்க்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா தரப்பு மீதும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கடுப்பில் இருப்பதை அறிய முடிகிறது. இரண்டாமாண்டு தொடக்க விழாவில் திடீரென பிரஷாந்த் கிஷோர் எங்கிருந்து வந்தார்? விஜய் தனித்துதான் போட்டியிடுவார் என அவர் எப்படி அறிவித்தார்? திடீரென அவர் ஒதுங்கிக் கொண்டது ஏன்? என்கிற கேள்விக்கு இன்னமும் பல நிர்வாகிகளுக்கு பதில் தெரியவில்லை. விஜய்யை 'Cult' ஆக பிராண்டிங் செய்கிறேன் என சொதப்பலான வியூகங்களை ஜான் ஆரோக்கியசாமி வகுத்துக் கொடுக்கிறார் என ஒரு தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது.

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

இரண்டாண்டுகளில் விஜய்யை வைத்து உருப்படியாக ஒரு மக்கள் பிரச்னை சார்ந்த போராட்டத்தை கூட முன்னெடுக்க வைக்கவில்லை. செய்த ஒரே ஆர்ப்பார்ட்டம் அஜித் குமாரின் லாக் அப் டெத்துக்கு எதிராக மட்டும்தான். அதுவும் வெறும் 23 நிமிடங்களுக்கு மட்டும்தான். அதிலும் விஜய் மூன்றே மூன்று நிமிடங்களுக்கு மட்டும்தான் பேசினார். அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் குமாருக்காக ஒரு இரங்கல் செய்தியை கூட வெளியிடவில்லை. இதே சமயத்தில்தான் இன்னொரு பக்கத்தில் தலித்துகளின் ஆதரவு எங்களுக்குதான் இருக்கிறது என தம்பட்டம் மட்டும் அடித்துக் கொண்டார்கள்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

கரூர் சம்பவத்தின் போதும் விஜய்யை அங்கிருக்க வேண்டாமென உடனே அழைத்ததும், சம்பவம் முடிந்து மூன்று நாட்கள் கழித்து முதல்வருக்கு சவால்விட்டு வீடியோ போட வைத்தது, ஊடகங்களில் பேச தயாராக இருந்த நிர்வாகிகளையும் அடக்கி வைத்ததென பல சம்பவங்களில் விஜய்யின் வியூக தரப்பின் மீது முக்கிய நிர்வாகிகளும் அவரின் Virtual Warriors -ம் அப்செட்டில் இருப்பதை அறிய முடிகிறது. இதெல்லாம் விஜய்க்கு தெரிகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

பேரழிவோ பெருந்துயரமோ ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டு காணாமல் போவது ஒரு அரசியல் கட்சிக்கு அழகல்ல. மக்களுக்காக அல்ல, உங்களின் கட்சிக்காகவும் கட்டமைப்புக்காகவுமே நீங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது விஜய்! தேர்தலுக்கு நேரமாகிவிட்டது. இனியாவது உஷாராகுங்கள்!

'சாதியப் பிரச்னைகளை படமாக எடுக்கக் கூடாது' - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவர், “சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை வரவுள்ளார். அவருக்கு... மேலும் பார்க்க

கோவை திடீரென சாய்ந்த மின் கம்பம் - கண் இமைக்கும் நொடியில் யானைக்கு நடந்த சோகம்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவார சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். இவற்றில் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் உலா வருவது வ... மேலும் பார்க்க

``அவமானம், வெறும் 80 ரூபாய்க்கு வாக்காளரின் உரிமையை பாஜக பறித்ததுள்ளது'' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் மீதும், நடந்து முடிந்த நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது தொடர்பாக பல்வேறு ஆதாரங்களுடன் செய்தியாளர்களையு... மேலும் பார்க்க

பல மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு நேரடி நெருக்கடி தந்த அமெரிக்கா - அது என்ன?

'பேச்சுவார்த்தைகள் எதுவும் சரியாக போகவில்லை' என்று ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடக்கவிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.உக்ரைன் - ரஷ்யா போர் ... மேலும் பார்க்க

ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளாத மோடி; ட்ரம்ப்பும், வர்த்தக பேச்சுவார்த்தையும் காரணமா?

வரும் 26 - 28 தேதிகளில், மலேசியாவில் 47-வது ஆசியான் உச்சி மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் இந்திய... மேலும் பார்க்க