Vetrimaaran: "அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது" - இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 2' திரைப்படம் இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது .
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உரிமைகளுக்காகப் போராடும், அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பும் போராட்டக்காரர்களின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அரசியல் கருத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லரிலேயே, 'வன்முறை எங்க மொழி இல்லை. ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்' மற்றும் 'தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க... அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது..' என்ற அரசியல் அழுத்தமான வசனங்களும் கவனம் ஈர்த்திருந்தன. கூடவே வீரமும், காதலும் என விஜய் சேதுபதி, மஞ்சுவாரியரின் காதலும் இதம் சேர்த்திருக்கிறது.
இத்திரைப்படம் இன்று காலை 9 மணி காட்சியுடன் வெளியானதையொட்டி சென்னை காசி திரையரங்கிற்குச் சென்று ரசிகர்களின் வரவேற்பை நேரில் கண்டார் இயக்குநர் வெற்றிமாறன். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "ரசிகர்கள் எப்படி படத்தைப் பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வந்தேன். படம் முடிந்ததுக்கு அப்புறம் வரவேற்பு எப்படி இருக்குதுனு தெரியும், ரசிகர் என்ன சொல்றாங்கனு பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய சர்ச்சைக் குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், "அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது" என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.