இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி
Vijayakanth: `பத்திரமெல்லாம் வேணாம் பணத்தை வாங்கிட்டு போ' - மூப்பனார் பற்றி மனம் திறந்த விஜயகாந்த்
பெற்றோர்களின் நினைவாக...
கேப்டன் விஜயகாந்த் தன் பெற்றோர்களின் நினைவாக ஆரம்பித்தது தான் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி. அவர் இதற்கு முன்னர் பெற்றோர்களின் நினைவாக கோயம்பேட்டில் கட்டிய கல்யாண மண்டபம் நெடுஞ்சாலை பணிக்காக இடிக்கப்பட்டதில் அவரே இடிந்து போய்விட்டார். அதற்குப் பிறகு ஆண்டாள் அழகர் கல்லூரியில் கவனம் செலுத்தி வந்தார்.
அந்தக் கல்லூரிக்கான இடம் கேப்டனின் கைக்கு மாறிய விதமே சுவாரஸ்யமானது. அப்போதுதான் அவர் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்திற்கு முன்னேறிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் உதவியாகவும் அவரது கால்ஷீட், விஜயகாந்த் நடிக்கிற படங்களை முடிவு செய்பவராகவும் இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர். இருவரின் நட்பு பெரிதும் பேசப்பட்டு வந்த காலம் அது. இப்ராஹிமின் எந்தப் பேச்சையும் தட்டிக் கேட்காமல் ஒப்புக்கொள்வார் கேப்டன்.

அதே சமயம் இருவரும் அதில் கருத்து வேறுபாடு இருந்தால் தனிமையில் காரசாரமாக பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். அவர்கள் சுமுகமாக பேசி முடிவு எடுத்ததுதான் வெளியே தெரியும். அப்படிப்பட்ட காலத்தில் மாமண்டூரில் 100 ஏக்கருக்கு நிலம் விற்பனைக்கு வருவதை இப்ராஹிம் அறிந்தார். அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும். அதை விஜயகாந்த் பெயரில் பதிவு செய்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். ஆனால்அப்போது அந்தத் தொகையைப் புரட்ட முடியாமல் இருந்தது. இருந்தாலும் எப்படியோ அந்த இடத்தை வாங்கி விஜயகாந்த் பெயரில் பட்டா வாங்கிவிட்டார் இப்ராஹிம். அது அந்த சமயம் பெரும் பேசுபொருளாக இருந்தது.
தேவைப்பட்ட பணம்; நண்பன் ராவுத்தரின் யோசனை
நான் விஜயகாந்த்தோடு சேர்ந்து நேர்காணல்களுக்காக தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேலாகப் பழகியிருந்த அனுபவத்தில், ஓரளவு அவரது உள்ளும் புறமும் அறிந்தவன். விகடனில் அப்போது 'களத்தில் கேப்டன்' என்ற கட்டுரை தொடருக்காக நான் அவரோடு போகிற வழியில் சற்று இளைப்பாறுவதற்காக அந்தக் கல்லூரிக்கு போயிருந்தோம். அப்போதுதான் எல்லோரும் ஆச்சர்யப்பட்ட அந்த இடத்தை வாங்கிய விவரம் பற்றி கேட்டேன். அவர் கூறியதை அப்படியே இங்கு தருகிறேன்.
அந்த இடத்தை வாங்கிய விவரம்
கேப்டன் விஜயகாந்த் சொன்னவை; ``ராவுத்தர் தான் முதலில் இப்படி ஒரு இடம் விலைக்கு வந்திருப்பதை பற்றிச் சொன்னான். உன்னோட கனவு இதில் நிறைவேறும் என்றான். எனக்கு ஒரு பெரிய கல்லூரியைக் கட்டி சகாயமான கட்டணத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை அவன்கிட்ட சொல்லி புலம்பிக்கிட்டே இருப்பேன். ராவுத்தர் இந்த இடத்தை வாங்கி அந்தக் கல்லூரியைக் கட்டிடலாம் என்றான். எனக்கு அது சரியான விஷயமாகப்பட்டது. நானும் அந்த இடத்தைப் பார்த்துவிட்டேன். எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. ஆனால் உடனடியாக பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

நண்பன் ராவுத்தர் ஒரு ஐடியா சொன்னான். ஆனால் அந்த ஐடியா ஒர்க்கவுட் ஆகுமா என எனக்கு சந்தேகம் இருந்தது. அந்த ஐடியா இதுதான், 'நாம் இரண்டு பேரும் மூப்பனார் ஐயாகிட்ட போய் இந்தப் பணத்தை கேட்போம். பணத்தை திருப்பி தர கொஞ்ச காலம் அவகாசமும் கேட்போம். நிச்சயம் கொடுப்பார். நம்பிப் போவோம். நம்பினார் கெடுவதில்லை' என்றான் ராவுத்தர். உடனே 'தங்களைப் பார்க்க வேண்டும் ஐயா' என்று மட்டும் சொன்னான். மூப்பனார் ஐயா எங்கள் இருவருக்கும் நெருக்கமான அரசியல் தலைவர். உடனே வரச் சொல்லி விட்டார். நாங்கள் இரண்டு பேரும் அவரிடம் போய் நின்றோம். நானும் ராவுத்தரும் தயங்கித் தயங்கி இடம்பற்றிய தகவல் சொல்லி, கல்லூரி கட்ட நினைக்கிற ஆசையைச் சொல்லி பணம் கேட்டோம்.
'கொஞ்ச காலம் அவகாசத்தில் கொடுத்து விடுகிறோம். பத்திரம் எழுதித் தருகிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம். கண்டிப்பாக முறையாக திருப்பித் தந்து விடுவோம்' என்று இருவரும் சொன்னோம். அவர் ஒன்றுமே சொல்லாமல் எங்களை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். 'நாளை மறுநாள் சாயங்காலம் வாருங்கள்' என்று நலம் விசாரித்து விட்டு அனுப்பி விட்டார். கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.
ஒரு நாள் கழித்து மாலை 7 மணிக்கு அவர் வீட்டிற்குப் போனோம். நான்கு பெட்டிகளில் நாங்கள் கேட்ட தொகை இருந்தது. பத்திரப் பதிவுகளில் எச்சரிக்கை தேவை என்றார். நாங்கள் திருப்பித் தருவதற்கான செக், பத்திரங்களை அவரிடம் கொடுத்தோம். வாங்கி அப்படியே என் கைகளில் திணித்தார். `உன்னைத் தெரியும்யா, போய்யா... உன்னோட நல்ல எண்ணத்திற்கு உதவுகிற திருப்தி போதும்யா' என்றார். இவ்வளவு பெரிய தொகையை என்னை நம்பி எந்த பத்திரமும் வாங்கிக்கொள்ளாமல் கொடுத்ததும் எனக்கு கிளிசரின் இல்லாமல் கண்ணீர் பெருகிவிட்டது.
`அதெல்லாம் ஒன்னுமில்ல சந்தோஷமா போய் இடத்தை வாங்கி உன் காலேஜை கட்டிக்கோ திறப்பு விழாவுக்கு என்னை முடிந்தால் கூப்பிடு' என்று கண் சிமிட்டினார். அவர் கைகளைப் பற்றி என் கையில் கொஞ்சநேரம் வைத்திருந்து விட்டு வந்தேன். ராவுத்தர் அந்த பெரிய உடம்புக்கு ரொம்பவும் குலுங்கி அழுதுவிட்டான். பிறகு சில நாள்களில் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

சாப்பாடு விரும்பி சாப்பிடுகிற மாதிரி இருக்கணும் கண்டிப்பாக சொல்லியிருக்கேன். என்னோட பெரிய வெற்றி இந்த கல்லூரி தான் எனச் சொல்லும் போது அந்த ஆண்டாள் அழகர் கல்லூரியில் இருந்து கிளம்பியிருந்தோம்.
இப்போது ஆண்டாள் அழகர் கல்லூரி இன்னொரு நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு மாறியிருக்கிறது. அந்த செய்தியைக் கேட்டவுடன் கேப்டன் என்னிடம் பேசியதும், அப்போது அவரின் சிவந்த கண்களில் விரிந்த பெருங்கனவும் நினைவில் நிழலாடியது.