மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி காண்போம்: முதல...
இவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம், பும்ரா வேண்டாம்: ரவி சாஸ்திரி
இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்ததையடுத்து, அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?
இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அல்லது ஷுப்மன் கில் இவர்களில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கேப்டனுக்கான போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் பொருத்தமான தெரிவுகளாக இருப்பார்கள் எனவும், அவர்கள் இருவருக்கும் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்திய அனுபவம் இருக்கிறது எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா சரியான தெரிவாக இருப்பார் என கருதினேன். ஆனால், ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வேண்டாம். அவர் கேப்டன் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால், நாம் அவரை பந்துவீச்சாளராக இழக்க நேரிடும்.
தீவிரமான காயத்துக்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார். அவர் ஐபிஎல் போட்டிகளில் பந்துவீசி வருகிறார். அங்கு நான்கு ஓவர் மட்டுமே வீச வேண்டியிருக்கும். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 10 - 15 ஓவர்கள் வீச வேண்டியிருக்கும். கேப்டனாக அவருக்கு அழுத்தம் இருக்கும்.
ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவருக்கு 25 - 26 வயதுதான் ஆகிறது. அதேபோல, ரிஷப் பந்த் இருக்கிறார். இளம் வீரரான அவருக்கும் வாய்ப்பளிக்கலாம். இவர்கள் இருவரில் ஒருவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம். அவர்களது வயது அதற்கு மிக முக்கியமாகக் காரணமாக அமைகிறது. அவர்களால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்ல முடியும். அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள். ஐபிஎல் தொடரில் அணிகளைக் கேப்டனாக வழிநடத்திய அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது என்றார்.
இதையும் படிக்க: நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்: ரவி சாஸ்திரி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், விரைவில் பிசிசிஐ இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய கேப்டனை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.