காப்பாற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம்... வெட்டாமல், சாலை போட மாற்று ஏற்பாட...
VKT Balan: 'பலருக்கும் இன்ஸ்பிரேஷன்' - மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் காலமானார்!
மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவால் காலமானார்.
டிராவல்ஸ் துறையின் முன்னோடியான வி.கே.டி. பாலன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் தன்னுடைய சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். இங்கு வந்து கடும் பசியினால் தவித்த பாலன், அயராமல் தொடர்ந்து வேலை தேடி வந்தார். பல இடங்களிலும் வேலைகளுக்காக முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவை எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
விசாவுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வோருக்காக முன்பாகவே சென்று இடம் பிடித்து கொடுத்து முதலில் சிறிய அளவில் பணம் சம்பாதித்திருக்கிறார். வீடில்லாமல் பசியினால் தவித்து வந்த வி.கே.டி. பாலனின் வாழ்க்கை இந்த இடத்தில்தான் மாற்றத்தை எட்டியிருக்கிறது. இதே இடத்தில் டிராவல் துறையை சேர்ந்த பலரின் தொடர்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்த தொடர்புகள் மூலம் 1986-ம் ஆண்டு மதுரா டிராவல்ஸ் லிமிடெட் சர்வீஸை தொடங்கினார். இன்று அதே டிராவல்ஸ் துறையின் முன்னோடியாகவும் விளங்கி வருகிறார்.
தமிழகத்தில் 365 நாட்களும் 24 மணி நேர பயண சேவைகளை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இன்றும் மதுரா டிராவல்ஸ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரிலுள்ள வி.கே.டி. பாலனின் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தொழில்முனைவோர் பலருக்கும் ஊக்கமளித்துள்ள இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.
பாலனின் வாழ்க்கை பலருக்கும் இன்ஸ்பிரேஷன். காணொளி பேட்டிகள் மூலமாக அவர் இன்றைய தலைமுறைக்கும் அறிமுகம் ஆகி வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
பாலனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவிருக்கிறது.