Wayanad: ``வயநாட்டிற்கு வந்த பிறகுதான் அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்" - ராகுல் காந்தி!
கேரள மாநிலத்தின் வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிகட்ட பிரசாரம் நேற்று (நவ.11) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், சி.பி.ஐ வேட்பாளர் சத்யன் மொக்கேரி ஆகியோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மேளதாளங்கள் முழங்க கலாசக்கொட்டு எனப்படும் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி இறுதிகட்ட பிரசாரத்துக்கு வந்திருந்தார். ஐ லவ் வயநாடு என்ற டீ சர்ட் அணிந்து ராகுல் பிரசாரத்தில் கலந்துகொண்டார்.
பத்தேரியில் நடந்த இறுதிகட்ட பிரசாரத்தில் நவ்யா ஹரிதாஸை பொக்லைன் இயந்திரத்தில் உயரமாக நிற்க வைத்து பிரசாரம் மேற்கொண்டனர். இறுதிகட்ட பிரசாரத்தில் பேசிய நவ்யா ஹரிதாஸ், "வயநாட்டின் நிலைமை மாறியுள்ளது. பா.ஜ.க-வுக்கு ஆதரவு நிலையை மக்கள் கையில் எடுத்துள்ளனர்" என்றார்.
காங்கிரஸ் சார்பில் நடந்த இறுதிகட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், "எனக்கு கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் தெரியும். தேர்தல் முடிந்து வந்த பிறகு நான் முழுமையாக மலையளம் கற்றுக் கொள்வேன். 35 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியான, அழகான தேர்தல் பிரச்சாரமாக அமைந்தது வயநாடு தேர்தல் பிரச்சாரம் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எனக்கு அதிக அன்பை வாரி வழங்கி இருக்கிறீர்கள். நான் சாலையில் செல்லும் போதும் வீடுகளுக்கு வரும்போதும் நீங்கள் என் மீது மிகவும் அன்பை பொழிந்திருக்கிறீர்கள். அதிகாலையில் நான் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டு இரவு மிகவும் காலதாமதமாக வீட்டிற்கு செல்வேன். உங்கள் அன்பு காரணமாக எனக்கு எப்போதுமே சோர்வு தோன்றியது இல்லை. உங்கள் பிரதிநிதியாக நான் பாராளுமன்றத்தில் செயல்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
பிரசார நிறைவு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "பிரியங்கா என்னுடைய சிறிய சகோதரி. என் சகோதரி வயநாட்டின் எம்.பி-யாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நெருக்கடியான காலத்தில் என் சகோதரி எப்படி செயல்படுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எப்படி அவர் தனது குழந்தைகளை வளர்த்தார் என்பது எனக்கு தெரியும். உங்கள் மிகச்சிறந்த மக்கள் பிரதிநிதியாக பிரியங்கா காந்தி செயல்படுவார். வயநாடு இடைத்தேர்தல் மிக வித்தியாசமான பிரச்சாரமாக இருக்கும் என்று நான் பிரியங்காவிடம் கூறியிருந்தேன். வயநாட்டிற்கு போகும்போது அம்மாவின் வீட்டுக்கு அல்லது சகோதரனின் வீட்டுக்கு செல்வது போன்ற உணர்வு ஏற்படும். நீ அங்கு போவது அரசியல் ரீதியாக அல்ல உன் சொந்த குடும்பத்தை ஏற்படுத்துவதற்காக தான் அங்கு போகிறாய் என்று சகோதரியிடம் சொல்லி இருந்தேன்.
35 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா. ஆனால் இதுவரை அவர் எம்.பி ஆகவில்லை. சிலர் இரண்டு மூன்று தடவை பிரச்சாரம் செய்துவிட்டு எம்பி ஆக வேண்டும் என்பார்கள். வயநாட்டுக்கு மெடிக்கல் காலேஜ் வேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும், இரவு நேர பயணத்துக்கு தடை விதிப்பது போன்ற பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காண்பார். எனது அரசியல் கண்ணோட்டத்தை மாற்றி அமைத்தது வயநாடு. எனக்கு மக்களுடன் வித்தியாசமான ஒரு பந்தம் உண்டு என எனக்கு தோன்றியது. வழக்கமாக மக்களுடன் அரசியல் பந்தம் இருக்கும். நான் உங்களுக்கு வேண்டியதை செய்வேன் நீங்கள் எனக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்ற உறவு முறைதான் அரசியலில் இருக்கும்.
ஆனால் வயநாட்டில் அப்படி ஒரு பந்தம் அல்ல எங்களுக்கு இருந்தது. நான் 2004-ல் தான் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் 2019-ல் வயநாட்டின் எம்.பி-யாக ஆனேன். 2004 முதல் 2019 வரை நான் அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியதே இல்லை. வயநாட்டிற்கு வந்த பிறகுதான் அன்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்தினேன்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினேன அதில் முக்கியமான கருத்தாக அன்பை முன்னிறுத்தினேன். வயநாட்டு மக்களிடமிருந்து நான் அன்பை கற்றுக்கொண்டேன். அதனால் தான் நான் ஐ லவ் வயநாடு என்ற டீசர்ட் அணிந்துள்ளேன். நான் வயநாட்டின் மக்களிடம் இருந்து என்ன படித்தேன் என்பதை அனைவரும் காண வேண்டும் என்பதற்காக தான் இந்த டி சர்ட்டை போட்டு இருக்கிறேன். வயநாடு என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே இரண்டு எம்.பி உள்ள ஒரு தொகுதி ஆகும். நாங்கள் இரண்டு பேரும் வயநாட்டின் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவோம். வயநாட்டின் பெயர் மிகவும் சிறந்த சுற்றுலாத்தலமாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என என் சகோதரியிடம் நான் கூறினேன். அதற்காக என் சகோதரிக்கு நான் எல்லா உதவியும் செய்வேன். எனது சகோதரியை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88