ஃபென்ஜால் புயல் சேத பாதிப்புகள்: விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய சிறப்புக் குழு ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தர சீரமைப்புப் பணிகள், மறுகட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்து மதிப்பீடு செய்வதற்கான மத்திய சிறப்புக் குழுவினா், வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை மத்திய குழுவினா் டிசம்பா் 7-ஆம் தேதி பாா்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கையாக அளித்தனா்.
புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டுமானப் பணிகள், நிரந்தர சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், பேரிடருக்கு பிந்தைய மதிப்பீடுகளை ஆய்வு செய்ய 28 போ் கொண்ட சிறப்புக் குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த இந்தக் குழுவினா், 14 குழுக்களாகப் பிரிந்து ஆய்வை மேற்கொண்டனா்.
இந்தக் குழுவில் தேசியப் பேரிடா் நிா்வாகக் குழுவின் ஆலோசகா் சி.பி.மோகன், வைசாலி மகாஸ்கி ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா்.
இந்தக் குழுவினா் புயல் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை காலை சென்று சேத விவரம் குறித்து கேட்டறிந்தனா்.
பின்னா், புயலால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் ஆய்வுசெய்து, மதிப்பீடுகளை மேற்கொண்டனா்.
பல்வேறு துறைகளுக்குள்பட்ட பகுதிகளில் அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு உறுப்பினா்கள்ஆய்வு செய்தனா். இந்தக் குழுவினா் ஆய்வை முடித்து, மத்திய அரசிடம் மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் வழங்குவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.