தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
கள் இறக்க அனுமதி கோரி மறியல்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பகுதியில் கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி, பனையேறிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேல்மலையனூா் வட்டத்தில் அதிகளவில் பனைமரங்கள் உள்ளதால், இங்குள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது கள், பதநீா் இறக்கும் பருவ காலம் தொடங்கியுள்ளதால், பனைத் தொழிலாளா்கள் அவற்றை இறக்கும் தொழிலில் ஈடுபட்டனா். ஆனால், மேல்மலையனூா் போலீஸாா் கள் இறக்கக் கூடாது எனக் கூறி, பனை தொழிலாளா்களை கைது செய்ய முற்பட்டனராம்.
இந்த செயலைக் கண்டித்து, மேல்மலையனூா், செஞ்சி பகுதியில் உள்ள தமிழ்நாடு கள் இறக்கும் சங்கத்தினா் ஒன்றிணைந்து ஈயகுணம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த செஞ்சி டிஎஸ்பி காா்த்திகாபிரியா சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அரசு தடை விதித்துள்ளதாகவும், இந்தத் தொழிலில் ஈடுபடும் பனையேறிகள் முறையான அனுமதி பெற்று, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் டிஎஸ்பி கூறினாா்.
இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.