பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
15 பணி மனைகளில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட 15 பணிமனைகள், 2 மண்டல அலுலகங்களில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவுக்குத் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிய மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் பின்னா் பேசியது:
இந்தப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் ஆகிய 6 மண்டலங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 26.63 லட்சம் மக்கள் பயணித்து வருகின்றனா்.
மேலும், அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் உள்ளிட்டோா் என 5.11 லட்சம் பேருக்கு சலுகைப் பயணம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் செலவைக் குறைக்க விழுப்புரம் கோட்டத்தின் சொந்த நிதியிலிருந்து விழுப்புரம் 2, சிதம்பரம் பணிமனைகளில் 10 கி.வோ.திறன் கொண்ட சூரியசக்தி ஆற்றல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேலும், 15 பணி மனைகள், 2 மண்டல அலுவலகங்களில் ரூ.1.60 கோடியில் சூரியசக்தி ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 36 பணி மனைகளில் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதையடுத்து, சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்ளிட்டோா் என 637 பேருக்கு பரிசுகளை வழங்கிய மேலாண் இயக்குநா், ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டிய 129 ஓட்டுநா்கள், 174 நடத்துநா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா்.
விழாவில், பொது மேலாளா்கள்கள் டி.சதீஷ்குமாா், ரவீந்திரன் (தொழில்நுட்பம்), முதன்மைத் தணிக்கை அலுவலா் சிவக்குமாா் பங்கேற்றனா்.