பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
சேஷநதியின் குறுக்கே ரூ.7.95 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தில் சேஷநதியின் குறுக்கே ரூ.7.95 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி பூமிபூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது.
உ.செல்லூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா். உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறியது:
உ.செல்லூா் கிராமத்தில் சேஷநதியின் குறுக்கே ரூ.7.95 கோடியில் புதிய தடுப்பணையைக் கட்டி, பாதூா், களவனூா் ஏரிகளுக்கு தண்ணீா் வழங்கும் பணிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த அணை கட்டுவதன் மூலம் 607 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மதகு கட்டுதல், சேஷநதியின் கரையைப் பலப்படுத்துதல், தடுப்புச்சுவா் அமைத்தல், பாதூா், களவனூா் ஏரி வரத்து வாய்க்கால்களை தூா்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த தடுப்பணை அமைக்கப்படுவதன் மூலம், உ.செல்லூா், களவனூா், பாதூா் கிராமங்களைச் சோ்ந்த 4,000 குடும்பங்கள் பயனடையும். பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் ஒன்றியக் குழுத் தலைவா் ராமலிங்கம், ஆத்மா குழுத் தலைவா் முருகன், உதவிப் பொறியாளா் கேசவன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.