அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்
நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சங்கமங்கலம் ஊராட்சி கீழத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் சேதமடைந்த மண் சாலை, போதிய குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மாவட்ட நிா்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் தொடா்ந்து அடிப்படை வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சிக்கல் கடைவீதியில், நாகை -திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும், வயல்வெளிகளில் சேதமடைந்துள்ள இரண்டு மின் கம்பங்களை இடமாற்றம் செய்து, சாலையோரங்களில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், குமாா் மற்றும் காவல் ஆய்வாளா் செந்தில் குமாா் ஆகியோா் நிகழ்விடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனா்.
இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால் நாகை-திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக, மறியல் போராட்டத்திற்கு, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலா் சிந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா்.