மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்
நாகை மாவட்டத்தில் மீன் மற்றும் உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் அமைத்து 1 ஹெக்டோ் பரப்புக்கு ஆகும் மொத்த செலவினத் தொகை ரூ.11 லட்சத்தில், பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் (ரூ.4.40 லட்சம்) மற்றும் பெண்கள், ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் (ரூ.6.60 லட்சம்) வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு பொதுப் பிரிவில் 2 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், உயிா் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் உவா்நீா் இறால் வளா்க்க 1 அலகு அமைப்பதற்கான மொத்தச் செலவினம் ரூ.18 லட்சத்தில், பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் (ரூ.7.20 லட்சம்) மற்றும் ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் (ரூ10.80 லட்சம்) வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் நாகை மாவட்டத்துக்கு ஆதிதிராவிடா் பிரிவில் 1 எண்ணம் மற்றும் பொதுப் பிரிவில் 2 எண்ணம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன்விரலிகள் வழங்கும் திட்டத்தில் ஒரு ஹெக்டோ் பரப்பிலான குளத்தில் 10,000 மீன்விரலிகள் இருப்பு செய்திட ரூ.5,000 பின்னிலை மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு நாகை மாவட்டத்துக்கு 60 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டங்களில் பயன்பெற நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும், நாகை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து விண்ணப்பதாரா் தோ்வு செய்யப்படுவா் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.