ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்ட...
அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!
அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார்.
கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகையில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1955 ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்த சீனிவாசன், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் மின் திட்டங்கள் பொறியியல் பிரிவு இயக்குநர், 1984 ஆம் ஆண்டு அணுசக்தி வாரியத்தின் தலைவர், 1987 ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்திய அணுசக்தி திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதற்காக சீனிவாசனுக்கு பத்ம விபூஷண் விருந்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில்,
“மூத்த அணு விஞ்ஞானியும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் எம்.ஆர். சீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும்.
இந்தியாவின் முதல் அணு உலையான அப்சராவில் (1956) டாக்டர் ஹோமி பாபாவுடன் தனது புகழ்பெற்ற வாழ்க்கையைத் தொடங்கிய சீனிவாசன், அணுசக்தி ஆணையத்தின் தலைவர் மற்றும் திட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை 18 அணு மின் அலகுகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
அவரது தொழில்நுட்பத் திறமையும், அசைக்க முடியாத சேவையும் இந்தியாவின் அணுசக்தி நிலப்பரப்பில் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன.
அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.