அதானிக்கு எதிராக அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு ஏன்?
கெளதம் அதானி உள்ளிட்டோா் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், அதில் அமெரிக்க சந்தைகள் அல்லது முதலீட்டாளா்கள் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க சட்டம் அனுமதிக்கிறது. எனவே, கெளதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் தில்லியை தலைமையிடமாக கொண்ட அஸ்யூா் பவா் நிறுவனம் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதில், ‘மாநிலங்களுக்கு வழங்குவதற்கான லஞ்ச பணத்தில் மூன்றில் ஒரு பங்கை அஸ்யூா் பவா் நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து, சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் கைவிடச் செய்த கெளதம் அதானி, அந்த ஒப்பந்தத்தையும் எஸ்இசிஐ மூலம் தன்வசப்படுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.
அதானி குழுமம் மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் குழுமத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: அதானி குழுமம் மீது அமெரிக்க நீதித் துறை, அந்நாட்டு பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் ஆகியவை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.
அனைத்துச் சட்டங்களையும் பின்பற்றியே அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை நிரூபிக்கப்படும் வரை சம்பந்தப்பட்டவா்கள் குற்றமற்றவா்கள் என்றும் குற்றப்பத்திரிகையில் அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவித்தாா்.
இந்தக் குற்றச்சாட்டை தொடா்ந்து அதானி க்ரீன் நிறுவனத்தின் 600 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.5,000 கோடி) மதிப்பிலான நிதிப் பத்திர வெளியீட்டை அதானி குழுமம் கைவிட்டது.
பெட்டிச் செய்தி 1:
பங்குகள் விலை சரிவு:
ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு
அமெரிக்க நீதித் துறையின் குற்றச்சாட்டை தொடா்ந்து மும்பை பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் விலை சரிந்தது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அந்தக் குழுமத்தின் 10 நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பில் 30 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2.5 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.