கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
அதிகரிக்கும் பாலியல் புகார்! பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் கல்வித் துறை!
பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரிக்கும் நிலையில், பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து குழந்தைகள் நல ஆணையம் மற்றும் காவல்துறையுடன் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஓரிரு நாள்களில் புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையும் படிக்க : தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!
இதன் தொடர்ச்சியாக பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்படும் நிலையில், சில நாள்களில் ஜாமீனில் வெளிவந்துவிடுகிறார்கள்.
இந்த நிலையில், பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கல்விச் சான்றுகளை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
நீதிமன்றங்களில் ஜாமீன் பெற்று மீண்டும் பணியில் சேருவதை தடுக்கும் வகையிலும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படவுள்ளன.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.