`காதலைச் சொல்லலாம்; ஆனால்...' - கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்
திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு
சென்னை: அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
திருவான்மியூரில் பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல், தமிழக பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு, ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலளித்திருந்த நிலையில், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
சென்னை அம்பத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ்நாட்டு அரசியலை கரைத்துக் குடித்தவர்கள்.
அண்ணாமலையை போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவின் ஆலயமாகக் கருதப்படும் அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. பிறகு அவரால் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும்.
திமுகவை அழிக்கப் புறப்படுபவர்கள், தங்களின் அழிவுக்கு தொடக்கப் புள்ளி வைத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு பதிலடியாக 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுகவை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். அண்ணாமலை முதலில் தேர்தலில் போட்டியிட்டு ஒரு பேரவை உறுப்பினராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் எங்கு போட்டியிட்டாலும் திமுகவின் கடைகோடி தொண்டனை நிற்க வைத்துக்கூட, முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலையை மண்ணைக் கவ்வ வைப்பார் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.