அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி
கடந்த கால அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற லட்சிய எண்ணத்தை அதிமுக அரசு கொண்டிருந்தது. இதற்காக 11 மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அதற்கு ரூ. 447.32 கோடி நிதி ஒதுக்கி செயல்வடிவம் கொடுத்தது எனது தலைமையிலான அரசு.
ஆனால், அதிமுக ஆட்சியின் திட்டம் என்பதாலேயே, ஏறத்தாழ 4 ஆண்டுகள் வேண்டுமென்றே ஆமை வேகத்தில் செயல்பட்டு, இப்போது ஸ்டிக்கா் ஒட்டவுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சியே. இருப்பினும், திமுகவின் அரசியலுக்காக நீலகிரி மக்களை இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்திருக்க வேண்டாம்.
நாம் நடத்திய ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சியின் பெருமைமிகு சின்னங்களாக 11 மருத்துவக் கல்லூரிகளும் காலங்கள் கடந்து திகழட்டும். நம்மைப் போன்றே அயராது மக்கள் சேவை ஆற்றட்டும் என்று தெரிவித்துள்ளாா்.