தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெரும் ஆதாயம்: பிரதமர் மோடி
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
உரையில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் ராமேசுவரம் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது.
2014-க்கு பிறகு, மத்திய அரசின் உதவியோடு தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவில் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தை இணைக்கவல்ல உயர்த்தப்பட்ட இடைவெளி, அருமையான கட்டமைப்புக்கான மேலும் ஓர் எடுத்துக்காட்டு.
இன்றும்கூட, சுமார் ரூ. 8,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரத்தினுடனான இணைப்பையும் மேம்படுத்தும்.
சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுமக்கள் போக்குவரத்து வசதியும்கூட, சுலபமான பயணம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கட்டமைப்பு தொடர்பான பணிகளுக்கிடையே, இவற்றின் அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதை மறந்துவிடக் கூடாது.
கடந்த பத்தாண்டுகளில் சமூகக் கட்டமைப்பில்கூட இந்தியா சாதனைகாணும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோடிக்கணக்கானோருக்கும் இதன் ஆதாயம் கிடைப்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஏழை,எளிய 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கின்றன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள், ஏழை, எளியோருக்கு கிடைத்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 கோடியே 11 லட்சம் குடும்பங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதனால், நமது தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் ஆதாயமடைந்திருக்கிறார்கள்.