அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அன்பார்ந்த வாசகர்களே... - தீபாவளி மலர் 2025
உற்சாகம் பொங்க எல்லா வயதினரும் கொண்டாடும் தீபாவளி நெருங்கிவிட்டது. ஒளிரும் பட்டாசு, தித்திக்கும் இனிப்பு, பளபள புத்தாடை போலவே ஆனந்த விகடன் தீபாவளி மலரும் ஆண்டுதோறும் தீபாவளியில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஒன்று. கண்களுக்கு விருந்து படைக்கும் ஓவியங்கள், புகைப்படங்களுடன்... சிந்தனையைக் கிளறும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆன்மிகப் படைப்புகளுடன் ஆனந்த விகடன் தீபாவளி மலர் இதோ உங்கள் கரங்களில் தவழ்கிறது. எல்லா வாசகர்களின் எதிர்பார்ப்பையும் உள்வாங்கிக்கொண்டு உருவாகியுள்ளது இந்த `ஆனந்த விகடன் தீபாவளி மலர் - 2025.’
`உள்ளம் உருகச் செய்யும் பனிலிங்க தரிசனம்!’ என்ற கட்டுரை வாசகர்களுக்கு அமர்நாத் புனிதத்தலத்தை நேரில் தரிசித்த உணர்வைத் தரும். ரங்கப்பட்டினம் திருத்தலத்தின் அருமையை விவரிக்கும் கட்டுரை, திருவதிகையின் பெருமையை விளக்கும் திலகவதியார் வரலாறு, ருத்ர கங்கையின் மகத்துவத்தைப் பறைசாற்றும் தலபுராணம் ஆகியவை இந்த மலரின் சிறப்பம்சங்கள்; திருப்புகழ் மகாமந்திர பூஜையின் மகத்துவத்தை விவரிக்கும் பாசுரங்களுடன் ஓவியர்கள் பத்மவாசன், சிவசுப்ரமணியன், ராஜா, ஜீவா, கொண்டையராஜுவின் ஓவியங்களும் என அழகும் அருளும் ஒருங்கே மணக்கும் ஆன்மிகப் பக்கங்கள் வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது நிச்சயம்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார், நாகூர் ஹனிபா இருவருடைய நூற்றாண்டை உரிய முறையில் கொண்டாடும் சிறப்புப் பதிவுகள்; ரேடியோ அறிமுகமாகி, இந்தியாவில் வலம்வந்த வரலாறு; வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பேசும் சக்திவேலின் புகைப்படங்கள்; அன்றாடம் நாம் சந்திக்கும் பெண் தூய்மைப் பணியாளர்களின் மறுபக்கத்தைப் பேசும் கட்டுரை; இளம் கிரிக்கெட் வீரர் சாய் கிஷோரின் நேர்காணல்; `ஆண் சிங்கங்கள் வேட்டையாடுமா, வேட்டையாடாதா?’ என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் கானுயிர்ப் புகைப்படக்கலைஞர் ரவி செல்வம் குறித்த கட்டுரை; இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் திரைப்படைப்புகளுக்குப் பின்னால் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் என பக்கத்துக்குப் பக்கம் புதுமைகளுக்குப் பஞ்சமில்லை.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் நேர்காணல், தமிழின் நவீன படைப்பாளிகளான பெருமாள்முருகன், வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், யூமா வாசுகி, என்.ராம் ஆகியோரின் சிறுகதைகள்; ப்ரிம்யா கிராஸ்வின், ஆனந்தகுமார், ச.துரை, நேசன், பெரு.விஷ்ணகுமார், சவிதா, இசை, போகன் சங்கர் ஆகியோரின் கவிதைகள் இலக்கிய வாசகர்களை மகிழ்வூட்டும். உலகெங்கும் ஏ.ஐ-யின் தாக்கம் அதிகமாகியிருக்கும் காலம். இந்த மலரில் புது முயற்சியாக ஏ.ஐ எழுதிய சில சிறார் கதைகளையும் இடம்பெறச் செய்திருக்கிறோம்.
மொத்தத்தில் பல வண்ணங்களைக் கொண்டு இழைத்த ஒரு வானவில்லைப் போல் மலர்ந்திருக்கிறது இந்த ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலர். இல்லம்தோறும் இன்பம் பொங்கும்விதமாக தீபாவளிக் கொண்டாட்டம் திகழட்டும். மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்!
அன்புடன்,
ஆசிரியர்