அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று(அக்.1) விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் (பின்தேதியிட்டு) அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த ஒப்புதலால் பணியில் இருக்கும் மற்றும் பணி ஓய்வுபெற்றோர் சுமார் 1.15 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வை சமாளிக்க ஊழியர்களுக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் அளித்து 53 சதவிகிதத்தில் இருந்து 55 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
தற்போது ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 55 சதவிகிதத்தில் இருந்து 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தசரா மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.