H1-B விசா கட்டுப்பாடுகள்: "அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற்றலாம்" - நிபுணர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் H1-B விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தியிருப்பதனால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் நிதி மேலாண்மை முதல் ஆராய்ச்சி மேம்பாடு வரை கையாளும் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) இந்தியாவிலேயே அமைக்கலாம் எனப் பொருளாதார வல்லுநர்களும் தொழில்துறையினரும் கணிக்கின்றனர்.
இந்தியாவில் இதுபோன்ற 1,700 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. உலகில் உள்ள 3,200 GCC-க்களில் இது பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்பு மற்றும் விசா கெடுபிடிகள் நிறுவனங்களைத் தங்களது பணியாளர்களை பணிக்குச் சேர்க்கும் யுத்திகளை மாற்றியமைக்கத் தூண்டியிருக்கிறது.
டெலாய்ட் இந்தியாவின் பார்ட்னரும் GCC தொழில்துறைத் தலைவருமான ரோஹன் லோபோ, பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணியாளர் தேவைகளை மறு மதிப்பீடு செய்வதாகக் கூறியிருக்கிறார்.
2000 முதல் 5000 டாலராக இருந்த H1-B விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1 லட்சம் டாலராக மாற்றினார். இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்.

அத்துடன் அமெரிக்க செனட்டர்கள் H-1B மற்றும் L-1 தொழிலாளர் விசா திட்டங்களில் விதிகளைக் கடுமையாக்கும் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தினர். இந்த மசோதா முதலாளிகள் வெளிநாட்டினரை அழைப்பதற்குப் பயன்படுத்தும் ஓட்டைகளை அடைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்தால், செயற்கை நுண்ணறிவு (AI), தயாரிப்பு மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, அனலிடிக்ஸ் போன்ற துறைகளுடன் தொடர்புடைய உயர் நிலைப் பணிகளை அமெரிக்க நிறுவனங்கள் இந்திய GCC-களுக்கு மாற்றக்கூடும் எனத் தொழில்துறை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஹெச்1-பி விசா ஸ்பான்சர்களில் அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகிள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீட் வங்கியான ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் சில்லறை விற்பனையாளர் வால்மார்ட் ஆகிய நிறுவனங்களும் பிரதானமாக உள்ளதாக அமெரிக்க அரசின் தரவு காட்டுகிறது.
இந்த நிறுவனங்கள் முக்கிய பணிகளை இந்தியாவில் மேற்கொள்ளலாம் அல்லது கொலம்பியா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் நாடலாம் எனத் தெரிவிக்கின்றன.