நெல்லை ‘வந்தே பாரத்’ ரயிலில் இனி 16 பெட்டிகள்: தெற்கு ரயில்வே திட்டம்
‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு
‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சிவகாா்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் வீரமரணம் அடைந்த மேஜா் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், காஷ்மீா் முஸ்லிம்களை அவதூறு செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சில முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், இந்த அமைப்புகள் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பின்னா், சென்னையில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணியில் -6, அண்ணா நகா்-3, கோயம்பேடு-4, தியாகராயநகா்-6, பரங்கிமலை-2, கீழ்ப்பாக்கம்-2,மயிலாப்பூா்-2, புளியந்தோப்பு-4, வண்ணாரப்பேட்டை-5,கொளத்தூா்-2, அடையாறு-10 உள்பட 46 திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு திரையரங்குக்கும் 10 போலீஸாா் வரை பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். சில திரையரங்குகளில் இந்தத் திரைப்படத்தை பாா்க்க வந்த ரசிகா்கள், போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனா். சில இடங்களில் திரையரங்கு அமைந்துள்ள பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனா். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிலைமை சீராகும் வரை நீடிக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.