அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார் கார்கே!
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | ராகுல் காந்தி தள்ளியதால் தலையில் காயம்: பாஜக எம்பி
அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறியிருந்தார்.
இதன்தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
இந்நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
'டிசம்பர் 17 அன்று மாநிலங்களவையில் டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்' என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.