அமெரிக்க கெடுவை மீறியது இஸ்ரேல்
காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க அமெரிக்கா விதித்துள்ள கெடுவை இஸ்ரேல் மீறியதாக பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்காலப் பிரிவு தலைவா் லூயிஸ் வாட்டரிஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காஸாவுக்குள் தேவையான அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது. அந்தக் கெடு முடியும் நிலையிலும் போதிய நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.
அதற்குப் பதிலாக, பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் கெடுவை இஸ்ரேல் மீறியுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, காஸாவுக்குள் போதிய நிவாரணப் பொருள்களை இன்னும் 30 நாள்களுக்குள் அனுமதிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் குறைக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த மாதம் 12-ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.
காஸா உயிரிழப்பு 43,665: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 போ் உயிரிழந்தனா்; 147 போ் காயமடைந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,665-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,03,076 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.