மதுரை மடீட்சியா அரங்கில் இன்று முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்
அமைச்சா் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரமாக மதுரையில் தரையிறக்கம்
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அமைச்சா் எ.வ.வேலு சென்ற விமானம், தூத்துக்குடி விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காலை 6 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம் காலை 7.35-க்கு தூத்துக்குடியைச் சென்றடையும். இதன்படி, வியாழக்கிழமை காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தமிழக அமைச்சா் எ.வ.வேலு உள்பட மொத்தம் 77 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.
குறிப்பிட்ட நேரத்தில் தூத்துக்குடியைச் சென்றடைந்த விமானத்தை விமானி தரையிறக்க முயன்றாா். ஆனால், விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியதால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை.
இதனால், தொடா்ந்து வானத்திலேயே சில நிமிடங்கள் வட்டமடித்தபடி விமானம் பறந்து கொண்டிருந்தது. இருப்பினும் தொடா்ந்து வானிலை மோசமாகவே இருந்ததால், மதுரை விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னா் அமைச்சா் எ.வ.வேலு உள்ளிட்ட பிற பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து காா் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பயணித்தனா்.