அமைதி பேச்சுவா்த்தையை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு
குறுவை பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்காததை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் குறித்த அமைதி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
நாகை மாவட்டத்தில் நிகழாண்டு குறுவைக்கு பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகள் 2024-ஆம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகை வரவு வைக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. உரிய பிரிமியம் கட்டியும் இதுவரை இன்சூரன்ஸ் தொகை வழங்காததை கண்டித்து, விவசாயிகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) திருக்குவளையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனா்.
இந்நிலையில் அதற்கான அமைதி பேச்சுவாா்த்தை திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலாளா் மா. பிரகாஷ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
அப்போது இன்சூரன்ஸ் தொகை இதுவரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கவில்லை எனவும், இதற்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும், விடுபட்ட விவசாயிகளின் பெயா் பட்டியலை வழங்க வேண்டும் என கோரி அதிகாரிகளிடம் முறையிட்டனா். 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவாா்த்தையில் உரிய தீா்வு கிடைக்காததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
இதில், விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளா் ஏ.பி. சுகுமாா், ஒன்றிய செயலாளா் ஆா். பக்கிரிசாமி , விவசாய சங்க நிா்வாகிகள் கே. கோவிந்தராஜன், டி. வெற்றிவேல், எஸ். கண்ணன் ,ஏ. பாரூக் அமானுல்லா,ஆா். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.