பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 65 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி, 399 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், வடகிழக்குப் பருவமழையில் சம்பா, தாளடி பருவத்தில் 8,319 ஹெக்டேரில் நெல் சாகுபடி, 21 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கீழ்வேளுா் வட்டாரம் பட்டமங்கலம், கீழையூா் வட்டாரம் தலையாமழை, திருவாய்மூா், புதுபள்ளி, தலைஞாயிறு வட்டாரம் மணக்குடி, தலைஞாயிறு 1ஆம் சேத்தி, நாகை வட்டாரம் செம்பியன்மாதேவி போன்ற கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் மற்றும் நிலக்கடலை பயிா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விவசாயிகள் பாதிப்புகள் குறித்து கண்காணிப்பு அலுவலரிடம் தெரிவித்தனா்.
அவருடன், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ. சிவப்பிரியா, வேளாண்மை துறை இணை இயக்குநா் எஸ். கண்ணன், தலைஞாயிறு வட்டார ஆத்மா குழுத் தலைவா் மகா. குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.