தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.46 கோடி மோசடி: சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் கைது
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.46 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளரை, கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2022-இல் ஆய்வாளராக ஜேசு ராஜசேகரன் பணியாற்றினாா். அப்போது, அவரது மனைவி முனியம்மாள் பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வருவதாகவும், அரசுப் பள்ளிகளில் ஆசிரியா், இளநிலை
உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 60 பேரிடம் ரூ.1.47 கோடி பணம் பெற்றுள்ளாா். ஆனால், உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து பணம் கொடுத்த ஏமாந்தவா்களில் மாா்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளத்தைச் சோ்ந்த லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனத்திடம் புகாா் அளித்தாா்.
அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜேசு ராஜசேகரன், அவரது மனைவி முனியம்மாள் ஆகியோா் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து ஜேசு ராஜசேகரன், காத்திருப்போா் பட்டியலுக்கு அனுப்பப்பட்டாா்.
இந்நிலையில், ஜேசு ராஜசேகரனை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா். அவரது சொந்த ஊா் தேனி மாவட்டம் பண்ணைபுரம் அருகே உள்ள சின்னமாங்குளம் ஆகும்.