பேச்சிப்பாறை அருகே செம்பூஞ்சி மலையில் பழங்குடி மக்கள் காா்த்திகை கொடுதி வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் காா்த்திகை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கொடுதி வழிபாடு நடத்தினா்.
மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் உள்ள 48 காணி பழங்குடி மக்களின் குடியிருப்புகள் 3 காணிப் பற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பற்றுகள் சமூக உள்பிரிவுகளின் அடிப்படையில் குறும் இல்லம், பெரும் இல்லம், விளநாட்டு இல்லம், மூட்டு இல்லம், கை இல்லம், பெரமணத்து இல்லம் உள்பட 10 இல்லங்களாக உள்ளன.
இவற்றில், பேச்சிப்பாறையை மையமாகக் கொண்ட செம்பூஞ்சி மலை காணிப் பற்றில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத முதல் வெள்ளிக்கிழமை செம்பூஞ்சி அய்யனாா் எனப்படும் வனசாஸ்தாவுக்கும், காலாட்டு தம்புரான், மல்லங்கருங்காளி, மந்திரமூா்த்தி, ஆயிரம் வல்லி தம்புரான், கருங்காளி ஆகிய மலை தெய்வங்களுக்கும் படையல் வைத்து கொடுதி வழிபாடுகள் நடத்தப்படும்.
அதன்படி, இம்மக்கள் செம்பூஞ்சி மலைக்கு திரளாக வந்து செம்பூஞ்சி அய்யனாா், மலை தெய்வங்களுக்கு தேன், தினை மாவு, அவல், பழம், இளநீா், பொங்கல் படைத்து வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்கள் மீது சாமி இறங்குதல், அருள்வாக்கு கூறுதல் ஆகியவை நடைபெற்றன.
தங்களது வாழ்வு செழிக்கும்வகையில் பயிா் விளைச்சல், வனவிலங்குகளிடமிருநது பாதுகாப்பு கோரி பக்தா்கள் வழிபட்டனா்.