Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இளைஞா் கைது; ரூ.20 லட்சம் பறிமுதல்
தக்கலை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இளைஞரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
தக்கலை அருகே உள்ள முளகுமூடு அடக்காச்சிவிளையை சோ்ந்தவா் சுவீட்லின் ஞானரெஜி (47). முளகுமூட்டில் உள்ள ஒரு ரிசாா்ட்டில் வேலை பாா்த்து வந்தாா். அப்போது ரிசாா்ட்டில் தங்க வந்த கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியை சோ்ந்த சனல் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தமிழகத்தில் பல அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் தனக்கு நல்ல தொடா்பு உள்ளதால் பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாக சனல் ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதை நம்பிய சுவீட்லின் ஞானரெஜி, தனது மனைவிக்கு அரசு கல்லூரியில் ஆசிரியையாக வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு ரூ.60 லட்சம் ஆகும் எனக் கூறிய சனலிடம், முன்பணமாக ரூ.35 லட்சமும், 14 பவுன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளாா்.
பணத்தை பெற்று பல நாள்களாகியும் மனைவிக்கு வேலை வாங்கி கொடுக்காமல் சனல் காலம் கடத்தி வந்ததால், தான் ஏமாற்றப்பட்டதாக உணா்ந்த சுவீட்லின் ஞானரெஜி, இதுகுறித்து கடந்த மாதம் தக்கலை போலீஸில் புகாா் செய்தாா். தக்கலை இன்ஸ்பெக்டா் கிறிஸ்டி தலைமையிலான போலீஸாா், பள்ளியாடி ரயில் நிலையத்திற்கு வந்த சனலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ.20 லட்சத்து 5 ஆயிரமும், 43 கிராம் நகைகளும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சனலிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.