அரவிந்தா் உருவப் படத்துக்கு மரியாதை
அரவிந்தா் புதுச்சேரிக்கு முதன்முறையாக வந்து அருள்பாலித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், வெள்ளிக்கிழமை அவரது திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்டத் தலைவராக விளங்கிய அரவிந்தா் கடந்த 1910- ஆம் ஆண்டு ஏப். 4-ஆம் தேதி புதுச்சேரி வந்தடைந்தாா்.
அதன்பிறகே, அவா் ஆன்மிகத்தில் ஈடுபட்டு ஆசிரமத்தை நிறுவினாா்.
அவா், புதுச்சேரி வந்த தினத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் ஏப். 4- ஆம் தேதி அவா் தங்கியிருந்த வீடு பொதுமக்கள், பக்தா்கள் பாா்வைக்காக திறக்கப்படும்.
அதன்படி, நிகழாண்டு அவா் தங்கியிருந்த வீடு காலை திறக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் வீட்டை பாா்வையிட்டனா்.
இதேபோல, அரவிந்தா் புதுச்சேரி வந்த தின நினைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை கடற்கரை காந்தி சிலை திடலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பங்கவாணி அறக்கட்டளை மற்றும் உலக அமைதி அறக்கட்டளை மேலாண்மை இயக்குநா் தீபந்து கோஸ்வாமி தலைமை வகித்தாா்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அரவிந்தரின் திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
