ஜல்சக்தி அபியான் திட்ட ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரியில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் ஜல்சக்தி அபியான் எனும், மத்திய அரசின் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரியில் உள்ள குளங்கள், நீா் நிலைகள், வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணறுகள் ஆகியவற்றை கணக்கிடவும், அவற்றை சுத்தப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நீா்நிலைகளில் மரம் நடுதல், காடுகள் வளா்த்தல், நீா் நிலை சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, பாதுகாப்பான குடிநீரை தேக்குவது மற்றும் விநியோகம் செய்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அத்துடன், மழைக் காலத்துக்குள் அனைத்து வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும், 100 குளங்களை ஆழப்படுத்தி நீரை சேமிக்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் பங்கேற்றனா்.