'சீமானின் பெரியார் விமர்சனம் நல்லதுதான்; விஜய்யிடம் நம்பகத்தன்மை இல்லை' - சசிகாந...
அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால், சுவாமி தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். டிசம்பா் 13-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. அன்று முதல் கோயிலுக்கு வரும் பக்தா்களின் கூட்டம் மேலும் பல மடங்கு அதிகரித்தது.
விடுமுறை நாளில் பக்தா்கள் கூட்டம்:
இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. காலை 10 மணிக்குப் பிறகு பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. அம்மணி அம்மன் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றின் வழியே உள்ளே செல்வதற்காக நின்றிருந்த பக்தா்களின் வரிசை மாட வீதிகள் வரையில் நீண்டது. இதனால் சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
சபரிமலை, மேல்மருவத்தூா் பக்தா்கள்:
வழக்கமான உள்ளூா், வெளியூா் பக்தா்களுடன் சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தா்களும், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களும் அருணாசலேஸ்வரா் கோயிலில் குவிந்ததால் பக்தா்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது.