Asteroid: 2032-ல் பூமியில் மோதும் சிறுகோள்; இந்தியாவை பாதிக்குமா? -வானியலாளர்கள...
UP: ``இந்தோனேசியாவை போல இங்கும் சிறுபான்மையினர் ராமரை மூதாதையராக ஏற்பார்களா?'' -யோகி ஆதித்யநாத்
மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். அப்போது பேசிய அவர், தனக்கு இந்திய டி.என்.ஏ இருப்பதாக நகைச்சுவையாகப் பேசினார். அது சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ``உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் ராமர் அவர்களின் மூதாதையராகக் கருதப்படுகிறார். இந்தோனேசியா இந்திய பாரம்பரியத்தை மதிக்கிறது. விஷ்ணுவின் வாகனமான கருடன் தான் அவர்களின் ஏர்லைன் நிறுவனத்தின் பெயர். அவர்களின் நாணயத்தில் கணபதி இடம்பெற்றிருக்கிறார். ராம்லீலா அவர்களின் பிரதான பண்டிகை.
இந்தியாவில் சிறுபான்மையினர் பெரும்பாலும் 'வாக்கு வங்கியாக' மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இந்தியாவின் வளங்களிலிருந்து பயனடைந்துவரும் அவர்கள், ராமரை தங்கள் மூதாதையராக ஏற்றுக்கொள்வார்களா? வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் காலத்தின் தேவை. அடுத்த கூட்டத்தொடரில் இது செயல்படுத்தப்படும். சமூகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை உறுதி செய்வதே இத்தகைய மாற்றங்களின் குறிக்கோள்.
அண்டை நாடுகளின் சிறுபான்மையினருக்கு பயனளிக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) செயல்படுத்தப்பட்டது போல, திருத்தப்பட்ட வக்ஃப் மசோதாவும் செயல்படுத்தப்படும். உத்தரபிரதேசத்தில் வக்ஃப் சொத்தாக 1.27 லட்சம் சொத்துக்கள் உரிமை கோரப்பட்டது. ஆனால் விசாரணையில், 7,000 சொத்துக்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது. பொது சொத்து வருவாய் துறைக்கு சொந்தமானது. அதைவைத்து நிர்வாக நோக்கங்களுக்காக சேவை செய்ய வேண்டும்.
நாங்கள் எல்லா இடங்களிலும் கோயில்களைத் தேடவில்லை. வரலாற்றுச் சான்றுகள் இருக்கும் இடத்தில், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது முக்கியம். இந்திய வேதங்கள், சம்பலின் முக்கியத்துவத்திற்கு தெளிவான சான்றுகளை வழங்குகின்றன. 3,500 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புராணங்கள், எதிர்காலத்தில் விஷ்ணுவின் 10-வது அவதாரத்தின் இடத்தைக் குறிப்பிடுகின்றன. இஸ்லாம் 1,400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது, அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இருப்பினும், வரலாற்று உண்மைகளை புறக்கணிக்க முடியாது. புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழங்கால நகரத்தின் சான்றுகளை அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகின்றன. இதுபோன்ற உண்மைகள் வெளிவருகின்றன என்றால், அவற்றை ஏற்றுக்கொள்ள அனைவருக்கும் தைரியம் வேண்டும். வெறும் மூன்று லட்சம் மக்கள்தொகை கொண்ட சம்பல், மாதந்தோறும் ரூ.200 கோடி மதிப்புள்ள மின்சாரத் திருட்டைச் செய்திருக்கிறது. திருட்டை எளிதாக்குவதற்காக மசூதிகளின் மேல் தற்காலிக துணை மின்நிலையங்கள் கூட அமைக்கப்பட்டிருக்கிறது" எனக் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.