செய்திகள் :

``மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தியிருக்கிறார்கள்'' - வேங்கை வயல் மக்கள் சொல்வதென்ன?

post image

`மூட்டைப் பூச்சிக்கு பயந்து..!'

”எங்கள் கையை வைத்து எங்கள் கண்ணையே குத்திக்கொள்வோமா?. நாங்களே மலத்தை அள்ளிப்போட்டுவிட்டு, அந்த தண்ணீரைக் குடிப்போமா?. ’பாவம் ஒரு பக்கம்... பழி ஒரு பக்கம்’ என்று காவல்துறை எங்கள் பிள்ளைகளையே குற்றவாளி கூண்டில் நிறுத்திருப்பது கொடுமை. மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது மாதிரி, நடிகர் விஜய்க்கு பயந்து, எங்களையே குற்றவாளியாக்கியிருக்கிறார்கள். எங்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை ஊரில் உண்ணாநிலை போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்று சீற்றம் பாதி, கண்ணீர் மீதியுமாக வெடிக்கிறார்கள் வேங்கை வயல் கிராம மக்கள்.

வேங்க வயல்

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

40-க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ சோதனை, ஐந்துக்கும் மேற்பட்டவர்களிடம் குரல் மாதிரி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

740 நாள்களை கடந்தும் இன்னும் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில்தான், அரசு தரப்பு வழக்கறிஞர், ‘கடந்த 20 - ம் தேதியே புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய குற்றச்செயலில் ஈடுப்பட்ட மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம்’ என்று கூறியதால், வேங்கை வயல் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொல்.திருமாவளவன், பா.ஜ.க அண்ணாமலை, கம்னியூஸ்ட் கட்சி சண்முகம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர், ‘இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று அறிக்கை விட்டனர். இதற்கிடையில், இந்த குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வேங்கை வயலுக்கு சென்று மக்களோடு அமர்ந்து போராட முயன்றதால், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வேங்கை வயல் கிராம மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேங்கை வயல் கிராமத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வேங்கை வயலைச் சேர்ந்த முருகனிடம் பேசினோம்.

`நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்கள்’

“போலீஸார் எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்கள். குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பவர்கள் மூவரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், தண்ணீரில் மலம் கலந்த்தை ஏறி பார்த்து, எல்லோருக்கும் சொன்னவர்கள். ஆனால், அவர்களையே குற்றவாளியாக்கியிருப்பது, எங்கள் வயிற்றில் நஞ்சள்ளிக் கொட்டியிருக்கிறது. சம்பவம் நடைபெற்ற நாள் முதல் நாங்கள் கைகாட்டிய குற்றவாளியை காப்பாற்றுவதற்காக, எங்கள் பிள்ளைகளை ’ஊருக்கு இளைத்தவன் ஆண்டி‘ என்பதுபோல் குற்றவாளியாக்கிவிட்டார்கள். இங்குள்ள ஆளுங்கட்சி புள்ளிகள், உண்மையான குற்றவாளிக்கு சார்பாகவும், எங்களுக்கு எதிராகவும் உருவாக்கிய திரைக்கதையை போலீஸார் குற்றப்பத்திரிகையாக கோர்ட்டில் சமர்பித்திருக்கிறார்கள். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் எங்களை அழைத்து, விருது கொடுத்தார்கள்.

முருகன்

அப்போது, அதில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வேங்கை வயல் பிரச்னையில் உண்மை ஜெயிக்க வேண்டும். உங்கள் ஊருக்கு விரைவில் வருகிறேன்’ என்று எங்களிடம் சொன்னார். அதேபோல், கடந்த ஒரு வார காலமாக, ‘விஜய் வேங்கை வயலுக்கு வரப்போகிறார்’ என்று தகவல் பரவியது. அப்படி நடந்தால், உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற முடியாது என்று பயந்து, அதனால் ஏற்படும் அரசியல் அழுத்தத்துக்கு பயந்து, எங்கள் பிள்ளைகளை பலிகொடுத்திருக்கிறார்கள.

அதாவது, மூட்டைப் பூச்சிக்கு பயந்து, வீட்டைக் கொளுத்திய கதையாக விஜய்க்கு பயந்து, அப்பாவியான இளைஞர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றியிருக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் வரையில் நாங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் வாங்கப்போவதில்லை” என்றார் உறுதியாக!.

`நெருக்கடி தருகிறார்கள்’

அடுத்து பேசிய சதாசிவம் என்பவர்,

“இவ்வளவு நாளும் நாங்கள் கைகாட்டிய குற்றவாளிகளை ஏதும் செய்யாமல், எங்கள் தரப்பையே குற்றவாளியாக்கியதால், நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், போலீஸார், போராட்டத்தை கைவிடும்படி நெருக்கடி தருகிறார்கள். இலுப்பூர் ஆர்.டி.ஓ அக்பர் அலி ஞாயிற்றுக் கிழமை வந்து, ‘போராட்டத்தை கைவிடுங்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம்’ என்று நைச்சியமாக பேசி, எங்கள் போராட்டத்தை கலைக்கப் பார்த்தார்கள். ஆனால் நாங்கள், ‘எங்களுக்கு தேவை உண்மையான குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதுதான். 1964 - லேயே எங்கள் பாட்டன், பூட்டன் உழுத நில உரிமையைப் பறித்து, இங்குள்ள ஆதிக்க சக்திகள் எங்கள் முன்னோர்களை கொடுமைப்படுத்தினர். அதை மீட்க போராடியதால், சில பெண்கள் தாலியை இழந்தனர்.

சதாசிவம்

இப்போது நாங்கள், இந்த மலம் கலந்த தண்ணீர் பிரச்னையில் அதே ஆதிக்கச் சக்திகளால் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, இங்குள்ளவர்களால் கொடுமைக்கு ஆளாவதே எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. எங்களை குற்றவாளியாக்கிவிட்டு, நீங்கள் தரும் அற்ப வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு, நாங்கள் என்ன செய்வது?’ என்று சொல்லி மறுத்துவிட்டோம். ’ஆட்சியர் கலைந்து செல்லுங்கள்’ என்று சொல்லிப் பார்த்தும், நாங்கள் மறுத்துவிட்டோம். எங்கள் மீது விழுந்த களங்கம் மறையும் வரையில் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை” என்றார்.

அடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் இளமதி அசோகனிடம் பேசியபோது,

“முதல்கட்டமாக இந்த குற்றப்பத்திரிகை தாக்கலை கண்டித்து, வேங்கை வயல் மக்களோடு அமர்ந்து போராடியபோது, போலீஸாரால் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டோம். அதனால், எங்கள் கட்சி தலைமையிடம் தகவல் தெரிவித்தோம். தமிழக அரசு தரப்பில் பேசிவிட்டு சொல்வ்தாகச் சொல்லியுள்ளார். ‘குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது’ என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். புதுக்கோட்டையில் எங்கள் கட்சியின் மூன்று மாவட்டங்கள் சார்பில் கட்சி தலைமையின் ஆலோசனையோடு இந்த விவகாரத்திற்கு எதிராக பெரிய அளவில் முன்னெடுப்புகளை செய்ய இருக்கிறோம்” என்றார்.

இளமதி அசோகன்

இறுதியாக, இந்த விவகாரம் குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி கல்பனாதத்திடம் பேசினோம்.

”அல்ரெடி பிரஸ் நோட் கொடுத்திருப்பாங்களே” என்றார். நாம் இந்த விவகாரத்தில் வேங்கை வயல் கிராம மக்கள் சொன்ன விசயங்கள் குறித்து கேட்க, “சி.பி.சி.ஐ.டி-யைப் பொறுத்தவரையில் ஹெட் ஆபிஸில் கொடுப்பது தான். தனிப்பட்ட முறையில் கொடுக்க முடியாது. ஸாரி சார். இதுவரைக்கு பிரஸ் நோட்டாக கொடுக்கப்பட்டுள்ளது மட்டும் அஃபிஸியாலாக உள்ள தகவல். இன்வெஸ்டிகேஷன் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால், வேறு எதையும் உங்களிடம் ஷேர் பண்ண முடியாது” என்றதோடு, முடித்துக்கொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க