ராசிபுரம் அண்ணா சாலை அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா நுழைவாயில் திறப்பு: அமைச்சா், ...
Baakiyalakshmi: கோபியுடன் பிரேக் அப் செய்யும் ராதிகா?; திடீர் திருப்பம்; அடுத்து என்ன நடக்கும்?
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவும் அவரது மகளும் கோபியை விட்டு விலகிச் சென்றது சீரியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா ஆகிய கதாபாத்திரங்களின் உறவை வைத்து இதுவரை பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
ராதிகாவை கோபி திருமணம் செய்தது, பாக்யலட்சுமி வீட்டின் முன்பே அவர்கள் குடி வந்தது, கோபியை பாக்யா காப்பாற்றியது, பாக்யா வீட்டிற்குக் கோபியும், ராதிகாவும் வந்தது எனக் கதைகளம் விறுவிறுப்பாக நகர்ந்தது.
தற்போது பாக்யாவின் வீட்டிலிருக்கும் கோபியிடம் பாக்யா வாடகை பெற்று வருகிறார்.
நேற்றைய எபிசோடில் கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறுவதாக ராதிகா கூறினார். அதற்கு பாக்யா, ஜெனியை தவிர வீட்டில் இருந்த அனைவருமே சோகத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இனியா அழுதுகொண்டே இருந்தார்.
கோபியின் உடல்நிலைக்காகவும், இனியாவுக்காகவும் பாக்யலட்சுமி கோபி தன் வீட்டில் இருக்க சம்மதித்தார். ஆனாலும் அவரும் ராதிகாவும் தங்குவதற்கு வாடகை வாங்கினார். 10 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த 10 நாட்கள் முடிந்ததைத் தொடர்ந்து ராதிகா வீட்டைவிட்டு வெளியேறுவதாக அனைவரிடமும் கூறினார்.
இதனிடையே இனியாவின் நடனப் போட்டி நிகழ்வில் கோபியின் வற்புறுத்தலால் ராதிகா மேடை மீது ஏறியதால் இனியாவை அனைவரும் கிண்டல் செய்கின்றனர். இதனால் இனியா மன உளைச்சலுக்கு ஆளாகி நடனப் போட்டியில் கோட்டைவிடுகிறார்.
ஒவ்வொரு முறையும், கோபி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் இனியாவை அவரின் தோழிகள் கலாய்ப்பது போன்று காட்சிகள் வரும்போதெல்லாம் இந்த சமூகம் உண்மையில் இப்படி இல்லையே என்றுதான் தோன்றுகிறது. அம்மா அப்பாவுக்கு விவாகரத்து ஆவதால் குழந்தைகள் மனதளவில் சங்கடப்படுவது, சில இடங்களில் அவமானப்படுவது எல்லாம் உண்மைதான்.
ஆனால் இந்த சீரியலில் அதனைப் பெரிதுபடுத்தி, இனியாவின் முகத்திற்கு முன்பாகவே பலர் கிண்டல் செய்வதுபோல் காட்டுவது எதார்த்தமாக இல்லை. நம் சமூகம் இவ்வளவு மோசமானதில்லை என்றே தோன்றுகிறது. சீரியலில் இதுபோன்ற `ஓவர் டோஸ்’ காட்சிகளை தவிர்க்கலாம்.
இனியா டான்ஸ் போட்டியில் தோற்றுப் போனதையும், மேடையில் வைத்து அவமானப்படுத்தப்பட்டதையும் சரி செய்ய ராதிகா ஒரு ட்ரிப்பை ஏற்பாடு செய்கிறார். கோபியை வைத்து அதனை நடத்துகிறார். ரெசார்ட்டுக்கு ஒருநாள் சென்று குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகின்றனர்.
கோபி, இனியா மற்றும் அவரின் அம்மாவுடன் மனமகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து ராதிகா ரசிக்கிறார். அனைத்தையும் போட்டோ எடுக்கிறார். ராதிகாவின் இந்த நடவடிக்கைகளை பார்த்து பாக்யாவுக்கு சந்தேகம் வருகிறது. ராதிகாவிடம் பாக்யா, `ஏன் இப்படி நடந்துக்குறீங்க' என்று கேட்க, ராதிகா அதற்கு ‘மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை தள்ளி நின்று ரசிப்பதும் சந்தோஷம் தான்’ என்கிறார்.
பாக்யா ஜெனியிடம் ராதிகா ஏதோ பெரிய முடிவை எடுத்திருக்கிறார் என்று சரியாக யூகித்துச் சொல்கிறார். அனைவரும் வீட்டிற்கு வந்ததும் ராதிகா, வீட்டை விட்டு நாளை சென்று விடுகிறோம் என்று சொல்கிறார்.
கோபி தன் குடும்பத்தை பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தில் இரவு முழுவதும் தூங்காமல் அழுகிறார். கோபி அம்மா, இனியா, செழியன் ஆகியோரும் இதை நினைத்து வருந்துகின்றனர்.
இனியா அழுவதைப் பார்த்து பாக்யா சமாதானப்படுத்துகிறார். இனியாவிடம் தன் சூழலை விளக்குகிறார். `கோபி இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, நம் வீட்டில் இருப்பது என் நிம்மதியை சிதைக்கிறது’ என்று தன் மகளுக்கு புரிய வைக்கிறார். இனியாவும் புரிந்து கொள்கிறார். இதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது.
சமீபத்தில் வெளியான புரோமோவில், வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ராதிகா கோபியை பிரிவதாக சொல்கிறார். இனியாவிடம் உன் அப்பாவை நான் உன்னிடமே விட்டுவிட்டு செல்கிறேன் என்கிறார். அனைவரும் அதிர்ந்த்து நிற்கின்றனர்.
மற்றொரு புரோமோவில் ராதிகாவைச் சந்திக்க அவரின் வீட்டிற்கு வருகிறார் கோபி. ராதிகா முடிவாக நாம் பிரிந்து விடுவது தான் இருவருக்கும் நல்லது என்கிறார். ``நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன், அதே சமயம் என்னை யாரும் கஷ்டப்படுத்த அனுமதிக்க மாட்டேன்” என்பது தான் ராதிகாவின் பாலிசி. எனவே ராதிகா கோபி உடனான உறவை முறிக்கும் முடிவை எடுக்கிறார்.
இந்த இரண்டு புரோமோக்களுக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் ராதிகாவுக்கு மவுசு கூடிவிட்டது. `பேசாம ராதிகாவையே இந்த சீரியல் நாயகி ஆக்கிடுங்க' என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
பாக்யா ராதிகாவையும் வீட்டிற்கு வரச் சொல்லி ஒன்றாக வாழலாம் என்று கூப்பிட வாய்ப்புகள் அதிகம். ராதிகாவுக்காகவும், மையூவின் எதிர்காலத்திற்காகவும் பாக்யா இந்த முடிவை எடுக்க வாய்ப்புகள் அதிகம்.