Kudumbasthan:``பணம் இல்லாத உளவியல் நெருக்கடியை சந்திச்சிருக்கோம்; அதுதான் குடும்...
Bigg Boss: `வீடு... 50 லட்சம் பணம்...' - பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி? வருமான வரித்துறை சொல்வதென்ன?
சூப்பர் சிங்கர் சீசன் 9ல் வெற்றி பெற்ற அருணா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ’சூப்பர் சிங்கரில் பரிசாகக் கிடைத்த வீட்டுக்கு இன்னும் குடிபோகவில்லை. குறிப்பிட்ட தொகையை வரியாகக் கட்டிய பிறகே வீடு எங்களுக்குக் கிடைக்கும். அந்தத் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதி வாங்கியிருக்கிறோம்’ எனப் பேசியிருந்தார்.
இப்போது பிக் பாஸ் சீசன் 8 ல் டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்குப் பரிசுத் தொகையாக ரூ.40,50000 வழங்கப்படவிருக்கிறது. பிக் பாஸ் டைட்டில் வெல்பவர்களுக்கான் பரிசுத் தொகை என்பது ரூ.50 லட்சம்.
இதில் பணப்பெட்டி டாஸ்க்கில் எடுக்கப்பட்டு விட்ட ஒன்பதரை லட்சத்தைக் கழித்துவிட்டு மீதித் தொகை முத்துக்குமரனுக்கு வழங்கப்படவிருக்கிறது. பணப்பெட்டி டாஸ்கிலும் 50,000 ரூபாயை முத்துக்குமரனே எடுத்ததால் மொத்தத்தில அவருக்குக் கிடைக்கவிருக்கும் பணம் 41 லட்சம்.
சரி, இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பரிசாகப் பணம் பெறும்போது இதற்கென வரி செலுத்தப்பட வேண்டுமென்கிறது வருமான வரித்துறையின் சட்டம்.
எவ்வளவு வரி கட்ட வேண்டும்? வேறேதும் நடைமுறைகள் இதில் இருக்கிறதா? ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி எம்.எல். பெருமாளிடம் பேசினோம்.
‘’டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் இந்த மாதிரி வேற எந்த வகையிலாவது பெரிய தொகை பரிசாகக் கிடைக்குதுன்னா, அது ஒருமுறைதான் கிடைக்குதுன்னாலும் அதையும் வருமானமாகத்தான் கணக்கிடுவாங்க.
அப்படி வருமானமாகக் கணக்கிடும்போது, அதுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் வரி கட்டணும். ஆனா அப்படி கட்டிய பணத்துல ரீ பண்ட் வாங்கலாம். அது இங்க பலருக்கும் தெரியறதில்லை. அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில கலந்துகிடுற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி எடுத்திருந்தா, அந்த நிகழ்ச்சிக்காக பயணம் செய்திருந்தா இது எல்லாத்தையும் ஆவணங்கள் சமர்ப்பிச்சு கிளைம் செய்துக்கலாம்’’ என்கிறார் இவர்.
சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் இளங்குமரனிடம் இது தொடர்பாகப் பேசினோம்.
‘’இன்கம் ஃப்ரம் அதர் சோர்ஸின் கீழ் வருகிறது இந்த மாதிரியான பரிசுத் தொகை. வரியா 30 முதல் 35 சதவிகிதம் வரை வரி பிடித்தம் இருக்கும். அதேநேரம் இதுக்குச் செலவழித்த பணத்தை ரீ ஃபண்ட் வாங்கலாம். பயிற்சிக்குச் செலவழித்ததை மட்டுமில்லாம ஏஜெண்டுகள் வைத்து புரமோஷன் வேலைகள் செய்தாலும் அதையும் க்ளைம் செய்யலாம்.
ஆனா இதுல இன்னொரு விஷயம் என்னன்னா, இந்த க்ளைம் விஷயத்துல வருமான வரித்துறை அதை ஏத்துக்கவும் செய்யலாம். சில செலவுகளை ஏத்துக்காமப் போறதும் நடக்கும்’ என்கிறார்.
சூப்பர் சிங்கரில் டைட்டில் வென்ற செந்தில் கணேஷிடம் அவர் பரிசாக வாங்கிய வீடு குறித்துக் கேட்ட போது,
‘’அருணா பேசியதா நானுமே சில செய்திகள் பார்த்தேன். விஜய் டிவி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை பரிசா அறிவிச்ச காசையோ பணத்தையோ சரியா தந்துட்டுதான் வர்றாங்க. அந்தப் பரிமாற்றத்துல சில புராசஸ் இருக்கும்பட்சத்துல அது நம் கைக்குக் கிடைக்க கொஞ்சம் முன்ன பின்ன ஆகுது. எனக்கு ஐம்பது லட்சம் மதிப்புள்ள வீடு தர்றதாச் சொன்னாங்க. ஆனா வரியா 15 லட்சம் வரை கட்ட வேண்டி வந்தது. இன்னொரு ஆப்ஷனா 15 லட்சத்தைக் கழிச்சிட்டு 35 லட்ச மதிப்புள்ள வீட்டை வாங்கிக்கறீங்களானு கேட்டாங்க. நாங்க சரின்னு அப்படியே வாங்கிகிட்டோம்" என்றார்.