TVK Vijay rally stampede : காயமடைந்தவர்கள் Exclusive பேட்டி | Ground report
அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி
அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்’’ என கரூர் துயரத்திற்கு முதல்வர் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
நாம் முதலமைச்சராக இருந்த போது தொலைக்காட்சியைப் பார்த்துத்தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதலமைச்சர் நேரில் போகிறாரே? என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.
கரூர் சம்பவத்திற்கு ஆணையத்தை அரசு அமைத்ததை Eyewash ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பழனிசாமியின் Eye மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?
சமூக ஊடகங்களில் எந்தமாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள். பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழுதியவர்கள்தானே நீங்கள் இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாகத் தெரியும். பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.
முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்
அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29-ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Minister of School Education Anbil Mahesh has questioned AIADMK General Secretary Edappadi Palaniswami.