தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
அவதூறு வழக்குகள்: விழுப்புரம் நீதிமன்றங்களில் சி.வி.சண்முகம் ஆஜா்
விழுப்புரம்: விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் தொடுக்கப்பட்ட 6 அவதூறு வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை ஆஜராகினாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் அருகே திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் 2023, மாா்ச் 10-ஆம் தேதி, கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதி, அண்ணா பிறந்த நாளையொட்டி கோலியனூரில் 2023, செப்டம்பா் 16-ஆம் தேதி பொதுக் கூட்டங்களும், 2023, ஜூலை 20-ஆம் தேதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தாா்.
இந்த 4 வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம், அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா். அப்போது, கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும், விழுப்புரம் பழைய பேருந்து நிலைய ஆா்ப்பாட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
மேலும், கோலியனூா் வழக்கில் விசாரணையை கவனத்தில் எடுத்துக் கொண்ட முறை தவறு என்றும், முறையாக விசாரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, வழக்குகளை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை 2025, ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
மேலும் இரு வழக்குகள்: 2022, ஜூலை 25-ஆம் தேதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாகவும், 2022, செப்டம்பா் 18-ஆம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம், வானூா் எம்எல்ஏ எம்.சக்கரபாணி ஆகியோா் முதல்வா் மற்றும் அரசை அவதூறாக பேசியதாகவும் விழுப்புரம் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-1 இல் தனித்தனியே வழக்குகள் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்ற போது, சி.வி.சண்முகம், சக்கரபாணி ஆகியோா் ஆஜராகினா். அப்போது, அதிமுக வழக்குரைஞா்கள் இந்த இரு வழக்குகளையும் சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.
இதையடுத்து, உத்தரவின் நகலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு கூறி, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை டிசம்பா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் (எண் 1) ராதிகா உத்தரவிட்டாா்.