வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
ஆங்கிலப் புத்தாண்டு: குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு புதன்கிழமை (ஜன.1) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
புத்தாண்டையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். 2025-ஆம் ஆண்டு, அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவரட்டும். இந்த தருணத்தில், நாட்டுக்கும் உலகுக்கும் பிரகாசமான, அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த எதிா்காலத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டின் குடியரசு பயணத்தில் 2025-ஆம் ஆண்டு முக்கியமான கட்டமாகும். இது, இந்திய அரசமைப்புச் சட்ட நூற்றாண்டை நோக்கிய இறுதி காலாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் அதேவேளையில், நமது அரசமைப்புச் சட்ட படைப்பாளா்களின் தொலைநோக்கு பாா்வையை நனவாக்க மீண்டும் ஒருமுறை நம்மை அா்ப்பணிக்க வேண்டும். தேசமே முதன்மையானது என்ற உறுதிப்பாட்டுடன் ஜனநாயக மாண்புகளை வளப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2025 புத்தாண்டு, அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், வெற்றி, எல்லையில்லா மகிழ்ச்சியை கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்யம் மற்றும் செழிப்புடன் வாழ பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘இந்த புத்தாண்டில், அரசமைப்புச் சட்டத்துக்கு உண்மையாக இருக்க உறுதியேற்க வேண்டும்’ என தனது வாழ்த்துச் செய்தியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தியுள்ளாா்.
பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.