`ஆசிட் போல விமர்சனம்; தடுக்க சட்ட நடவடிக்கை வேண்டும்' - திருப்பூர் சுப்ரமணியனுக்கு வசந்த பாலன் ஆதரவு
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட டிஜிட்டல் யுகத்தில், படம் ரிலீஸ் அன்றே அப்படம் குறித்த விமர்சனங்கள் வெளிவருகின்றன. அதிலும், பல முன்னணி ஊடகங்கள் உட்பட பல யூடியூப் சேனல்கள், தியேட்டரில் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளிவருபவர்களிடம் அங்கேயே படம் எப்படி இருக்கிறது கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றன. இதில், வேண்டுமென்றே ஒரு படத்தை நன்றாக இருக்கிறது என்றும், வேண்டுமென்றே படம் நன்றாக இல்லை என்றும் ஒரு படத்துக்கு ரசிகர்களே விமர்சனம் செய்வதுபோல வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் கூறப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ``இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் படத்தைத் திரையிட வேண்டும். இரண்டு வாரக் காலத்திற்குப் படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது.
பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால், மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சியில் சினிமாவைப் பார்த்துவிட்டு, தமிழகத்தில் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே யூடியூப் சேனல்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் காலி செய்கிறார்கள். தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என யூடியூபர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது. சிலரின் தவறான விமர்சனங்களால், ஏராளமான படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன." என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் வசந்த பாலன், திருப்பூர் சுப்ரமணியன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், ``தயாரிப்பாளர்கள் சங்கம் விமர்சனங்கள் விஷயத்தில் விரைவில் முடிவெடுக்கவேண்டும். ஆசிட் ஊற்றுவது போல வருகிற விமர்சனங்கள் ஒரு வாரம் வரை இணையதளங்களில் வரவிடாமல் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். திருப்பூர் சுப்பிரமணியம் வார்த்தைகளை நான் ஆதரிக்கிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...