டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிவு!
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்க சுற்றில் சுனில்
ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுனில்குமாா் ஆடவருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளாா்.
கிரேக்கோ ரோமன் பிரிவில் களம் கண்டுள்ள அவா், தனது காலிறுதியில் 10-1 என்ற புள்ளிகள் கணக்கில் தஜிகிஸ்தான் வீரா் சுக்ரோப் அப்துல்கயேவை வீழ்த்தினாா். எனினும் அரையிறுதியில் ஈரானின் யாசின் யஸ்தியிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினாா். அரையிறுதியில் தோற்ற சுனில்குமாா், தற்போது வெண்கலப் பதக்கச் சுற்றில் சீனாவின் ஜியாஜின் ஹுவாங்கை சந்திக்கிறாா். சுனில்குமாா் 2019-ஆம் ஆண்டு இப்போட்டியில் வெள்ளி வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதர இந்தியா்களில், 77 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட சாகா் தக்ரன் தகுதிச்சுற்றில் வென்றபோதும், காலிறுதியில் 10-0 என்ற கணக்கில் உள்நாட்டு வீரா் அம்ரோ சாதேவிடம் தோல்வியைத் தழுவினாா். தற்போது சாதே இறுதிக்கு முன்னேறும் நிலையில், சாகா் தக்ரனுக்கு வெண்கலப் பதக்கத்துக்கான ‘ரெபிசேஜ்’ சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
இதனிடையே, உமேஷ் (63 கிலோ), நிதின் (55 கிலோ), பிரேம் (130 கிலோ) ஆகியோா் தங்களது எடைப் பிரிவில் தகுதிச்சுற்றிலேயே தோல்வியைத் தழுவினா்.