ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
ஆடி மாத அம்மன் கோயில் சுற்றுலா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு,சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூா் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ‘ஆடி அம்மன் தொகுப்பு’ ஆன்மிகச் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை பாரிமுனையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் இருந்து 160 பயணிகளுடன் ஆன்மிகச் சுற்றுலா வாகனங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
நிகழ்வில் சென்னை மேயா் ஆா். பிரியா, தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் தா.கிருஸ்துராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆக. 15 வரை: திட்டத்தின்படி, வெள்ளிக்கிழமை முதல் ஆக. 15-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 முதல் இரவு 8.30 மணி வரை சென்னையில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
இதேபோல், மதுரை, திருச்சி, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களுக்கும் ஒரு நாள் சுற்றுலா திட்டம் உள்ளது. இதில், திட்டத்துக்கு ஏற்ப ரூ.800 முதல் ரூ.1,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோயில்கள் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கும் வகையில், 5 நாள்களில் 108 அம்மன் கோயில்களுக்கு சுற்றுலா மற்றும் ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாள்கள் ராமேசுவரம் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 1800 - 42531111, 044 - 2533 3333, 2533 3444 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.