சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
ஆண் நண்பர் தோழியுடன் எரித்துக் கொலை! பிரபல நடிகையின் சகோதரி கைது
பாலிவுட் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை நர்கீஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி(43) இரட்டைக் கொலை வழக்கில் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அலியா ஃபக்ரிக்கும்(43) அவருடைய ஆண் நண்பர் எட்வார்டு ஜேக்கப்ஸ்க்கும் இடையே கடந்த சில காலமாக உறவில் விரிசல் போக்கு நிலவி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக அவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எட்வார்டு ஜேக்கப்ஸின்(35) தோழி அனஸ்டாசியா எட்டென்(33) என்பவருடன் ஜேக்கப்ஸ் நட்புறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்துள்ள அலியா ஃபக்ரி ஜேக்கப்ஸை தன்னுடன் இணைந்து வாழ வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஜேக்கப்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நியூயார்க்கின் குயின்ஸ் மாவட்டத்தில் தனது தோழியுடன் ஒரு வீட்டில் வசித்து வந்த ஜேக்கப்ஸ் வீட்டுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி அதிகாலை வேளையில் சென்ற அலியா ஃபக்ரி, அந்த வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அதில், வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவரது நண்பர் எட்வார்டு ஜேக்கப்ஸ்(35) தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் அந்த வீட்டிலிருந்த எட்வார்டு ஜேக்கப்ஸின் தோழி அனஸ்டாசியா எட்டென் என்பவரும் தீயில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரட்டைக் கொலை வழக்கில் அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இம்மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. அலியா ஃபக்ரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுமென்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.