ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!
ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி - வாகா எல்லையை இந்தியா மூடியது. தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாலும் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதனால், பாகிஸ்தான் வழியாக சாலை மார்க்கமாக இந்தியாவில் நடக்கும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு இந்த வணிகப் பாதையில் வர்த்தகம் மேற்கொள்வது மிகவும் எளிமையானதுடன், செலவும் குறைவானதே.
இந்த நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்ட சமயத்தில் இந்தியாவுக்கு உலர் பழங்களை ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 160 லாரிகள், இரு நாடுகளின் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
அழுகும் பொருள்கள் என்பதால், ஆப்கானிஸ்தான் லாரிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் வணிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் லாரிகளை இந்தியாவுக்குள் அனுமதிப்பதற்காக, வெள்ளிக்கிழமையில் அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 8 லாரிகள் இந்தியாவுக்குள் வந்தது மட்டுமின்றி, மேலும் லாரிகள் வரவிருக்கின்றன.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!