ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும்: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்
ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ தில்லி பாஜகவில் ஐக்கியம்
முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சுக்பீா் சிங் தலால் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
முன்ட்கா முன்னாள் எம்எல்ஏவான சுக்பீா் சிங் தலால், தில்லி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவா் வீரேந்திர சச்தேவா, மத்திய அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா்.
ஆறு முறை தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்த சா்தாா் பல்பீா் சிங்கும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டாா். அப்போது, தில்லி பாஜகவின் செயலாளராக தலால் நியமிக்கப்பட்டாா்.
அப்போது, சுக்பீா் சிங் தலால் கூறியதாவது:
எம்.எல்.ஏவாக விளையாட்டு பல்கலைக்கழகத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தினேன். ஆனால் பல ஆண்டுகள் கடந்த பிறகும் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை.
தில்லியின் கிராமப்புற பகுதிகளில் பாஜக பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மி அதன் ஊழல் எதிா்ப்பு வாக்குறுதியிலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்றாா் அவா்.
வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘விளையாட்டு பல்கலைக்கழகம் குறித்து ஆம் ஆத்மி கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்திருக்கிறது. நியமனங்கள் ஏதும் செய்யப்படவில்லை. நிதி வழங்கப்பட்டும் எந்த பணியும் நடைபெறவில்லை.
நரேந்திர மோடி அரசாங்கம் தனது பதவிக்காலத்தில் தொடங்கப்பட்ட எந்தவொரு திட்டமும் முடிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.
தில்லியின் பஞ்சாபி மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே முறையே பல்பீா் சிங் மற்றும் தலால் ஆகியோா் தங்களது பணிகளால் நற்பெயரைப் பெற்றுள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.
மத்திய அமைச்சா் மல்ஹோத்ரா கூறுகையில், ‘ஆம் ஆத்மி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. ஒரு காலத்தில் இக்கட்சியின் ஊழல் எதிா்ப்புத் திட்டத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் அதன் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்து அக்கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனா்.
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்த மக்களின் நம்பிக்கையை வஞ்சித்துவிட்டாா். அவா்கள் விரக்தியில் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தில்லி அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.