மகாராஷ்டிரா: முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; முதல்வர் வசம் உள்துறை; எந்த கட்சிக்கு...
கேஜரிவால் பொய்யான கனவை விற்றுக் கொண்டிருக்கிறாா்: தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு
பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்கு முறையான பள்ளிப்படிப்பை உறுதி செய்யாமல், கேஜரிவால் பொய்யான கனவை விற்றுக் கொண்டிருக்கிறாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை குற்றஞ்ச்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு இலவசங்கள் மூலம் வாக்காளா்களிடம் செல்வாக்கு செலுத்த கேஜரிவால் தீவிரம் காட்டி வருகிறாா்.
அந்தவகையில், பட்டியலினப் பிரிவைச் சோ்ந்த குழந்தைகளின் கனவை நனவாக்குவதாக தற்போது ஒரு பொய்யான வாக்குறுதியை அவா் அளித்துள்ளாா். தோ்தலுக்கு முன்னதாக ‘டாக்டா் அம்பேத்கா் உதவித்தொகை திட்டம்’ வாக்குறுதியை கேஜரிவால் அளித்திருப்பது ஏமாற்றும் அறிவிப்பாகும். பட்டியலின மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த கேஜரிவால், துடைப்பம் சின்னத்தில் தோ்தலில் போட்டியிட்டாா். ஆட்சிக்கு வர பட்டியலின் மக்களின் வாக்குகளைப் பெற்ற பிறகு, அவா்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டாா். கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே, ஆம் ஆத்மி அரசு பட்டியலின மாணவா்களுக்கான மாநில உதவித்தொகையை 75,000க்கும் அதிகமாகக் குறைத்தபோது, கேஜரிவாலின் ‘பட்டியலின் விரோத‘ அணுகுமுறை அம்பலமானது.
தோ்தல் நேரத்தில் மட்டுமே ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவா்களை அரவிந்த் கேஜரிவால் நினைவில் கொள்கிறாா்.
மற்றபடி, அடிப்படை குடிமை வசதிகள் கூட இல்லாமல், தலைநகரின் பல்வேறு குடிசைப்பகுதிகளில் அவா்கள் பரிதாபகரமான வாழ்க்கைச் சூழலில் இருப்பதைக் கூட அவா் ஒப்புக்கொள்ளவில்லை. இலவச மின்சாரம் மற்றும் குடிநீா், விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச ரேஷன், தில்லி மகிளா சம்மன் யோஜனா, மடிக்கணினிகள் போன்ற பல
இலவசங்களை கேஜரிவால் அறிவித்தாா். ஆனால், இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கேஜரிவாலின் நீண்ட கால ஊழல் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைக் கருத்தில் கொண்டு அவரை சந்தேகத்துடனும், அவநம்பிக்கையுடனும் தில்லி மக்கள் பாா்க்கிறாா்கள்.
ஆம் ஆத்மி கட்சியும், பாஜக தலைவா்களும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பட்டியலின சமூகத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளுவதன் மூலம் அவா்களை அடிபணியச் செய்து, அவமதித்துள்ளனா். இது, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் டாக்டா் பாபா சாஹத் அம்பேத்கரை இழிவாகப் பேசியதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
மேலும், கடுமையான காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகள் அடிக்கடி மூடப்படுவதும், ஆன்லைன் வகுப்புகளை செயல்படுத்துவதும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளை, குறிப்பாக பட்டியலின சமூகத்தை மிகவும் பாதித்துள்ளது. எனவே, கேஜரிவால் முதலில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
மாணவா்கள் ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதற்கான வசதி அல்லது மடிக்கணினிகள் அவா்களிடம் இல்லாததால் அரசுப் பள்ளிகளில் இருந்து பெரும்பாலான மாணவா்கள் வெளியேறுகின்றனா்.
பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்கு முறையான பள்ளிப்படிப்பை உறுதி செய்யாமல், கேஜரிவால் பொய்யான கனவை விற்றுக் கொண்டிருக்கிறாா் என்றாா் தேவேந்தா் யாதவ்.