செட்டில்மென்ட் முடிந்தது; நானும் ஜெயஸ்ரீயும் முறைப்படி பிரிந்து விட்டோம் – சீரியல் நடிகர் ஈஸ்வர்
சீரியல் நடிகர் ஈஸ்வர் தனக்கு முறைப்படி விவாகரத்து ஆகிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
’தேவதையைக் கண்டேன்' முதலான பல சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர். சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் பொறுப்பிலிருக்கிறார். இவரும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.
சில ஆண்டு திருமண வாழ்க்கையில் என்ன பிரச்னையோ தெரியவில்லை, திடீரென ஈஸ்வர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகார் தந்தார் ஜெயஸ்ரீ. இதையடுத்து ஈஸ்வர் கைதாகி பிறகு விடுதலையானார்.
அப்போது தொடர்ச்சியாக மீடியாக்களில் இவர்களது குடும்பப் பிரச்னை குறித்த தகவல்கள் வெளிவந்தது நினைவிருக்கலாம்.
அந்தச் சமயத்தில் நாம் ஈஸ்வரிடம் பேசியிருந்தோம். அப்போது, ‘முதல்ல பேசறவங்க பேச்சுதான் எடுபடும்னு சொல்வாங்க. அதேபோலத்தான் என்னைப் பத்தி நிறைய பொய்த் தகவல்கள் முதல்ல பரவிடுச்சு. அதனாலயே நானும் சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கு.
போலீஸ் கைது செஞ்சது மட்டும்தான் வெளியுலகத்துக்குத் தெரிஞ்சது, ஸ்டேஷன்ல பஞ்சாயத்து நடந்ததெல்லாம் யாருக்கும் தெரியல’ எனப் பேசியிருந்தார்.
தொடர்ந்து ஈஸ்வர், ஜெயஸ்ரீ இருவரும் முறைப்படியான விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகச் சொல்லப்பட்டது.
இதற்கிடையில் கோவிட் ஊரடங்கு எல்லாம் வந்து விட்டதால் வழக்கு நிலுவையிலேயே இருந்ததாகவும் கூறினார்கள்.
மேலும் விவாகரத்து வழங்கப்படும் பட்சத்தில் ஜெயஸ்ரீக்கு சில செட்டில்மென்ட் செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவருக்கும் சட்டப்படியான விவாகரத்து கிடைத்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் ஈஸ்வர்.
’நானும் ஜெயஸ்ரீயும் இன்றுமுதல் அதிகாரபூர்வமாகப் பிரிந்து விட்டோம். முறைப்படியான செட்டில்மென்ட் எல்லாம் முடிந்து விட்டதால் நாங்கள் இருவரும் அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பப்படி தீர்மாத்துக் கொள்ளப் போகிறோம்.
நான் சந்தித்த கடந்த காலங்கள் என்னுடைய வாக்கையில் ஒரு சோதனையான காலகட்டம் என்றாலும் இன்னைக்கு அதுல இருந்து மீண்டு நல்லதொரு நிலையிலதான் இருக்கேன். இனி என் விருப்பமான நடிப்புல தீவிரமா கவனம் செலுத்தப் போறேன். சவாலான காலங்கள்ல என்னைப் பாதுகாத்த கடவுளுக்கு நன்றி.’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் இவர்.
ஜெயஸ்ரீ இது தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை.