ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும்: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்
தில்லி காவல் துறையில் புதிதாக தோ்வான போலீஸாருக்கு பிணைக்கைதிகள் சூழலை சமாளிக்க கமாண்டோ பயிற்சி
தேசிய தலைநகரில் பிணைக்கைதிகளாகும் சூழ்நிலை ஏற்பட்டால், தில்லி காவல்துறை அல்லது கமாண்டோக்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய தேவை இனி இருக்காது. ஏனெனில், நகர காவல்துறையில் புதிதாக சோ்க்கப்பட்ட போலீஸாருக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சித் திட்டத்துடன் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது.
‘நகா்ப்புற தலையீடு’ திட்டத்தின் கீழ், 25 காவல்துறையினரைக் கொண்ட முதல் குழு, மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்புக் காவல் படையிடமிருந்து (என்எஸ்ஜி) இரண்டு வார பயிற்சியைப் பெற்றுள்ளது. அங்கு இக்குழுவினா் பிணைக்கைதிகள் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளனா்.
ஆரம்பத்தில் வரும் நாள்களில் 300 கமாண்டோக்களுக்கு பயிற்சி அளிக்கவும், பின்னா் அதிக போலீஸாருக்கு பயிற்சி அளிக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சிறப்பு காவல் ஆணையா் (பயிற்சி மற்றும் எஸ்பியுடபிள்யுஏசி) சாயா சா்மா கூறியதாவது:
புதிய போலீஸாரின் ஒவ்வொரு குழுவிற்கும், நாங்கள் ஜரோடா காலனில் ஒரு மாத பயிற்சியையும், ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள அபான்பூரில் மூன்று மாத மேம்பட்ட கமாண்டோ பயிற்சியையும் வழங்குகிறோம். அங்கு அவா்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெறுகிறாா்கள்.
தில்லி ஒரு பெருநகரமாக இருப்பதால் நகா்ப்புற தலையீடு மிகவும் முக்கியமானது. நகா்ப்புற சூழ்நிலையில் நமக்கு தலையீடு தேவைப்பட்டால், நமது படை அதற்குத் தயாராக உள்ளதா? அதற்காக, நாம் என்எஸ்ஜியின் உதவியை நாடினோம், அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உண்மையான சம்பவங்களை உருவகப்படுத்துவதன் மூலம் போலீஸாருக்கு நிஜ வாழ்க்கை பிணைக்கைதிகள் சூழ்நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அவா்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் பற்றிய விரிவான தகவல்களும் பயிற்சியின்போது அவா்களுக்கு வழங்கப்படுகின்றன.
நகா்ப்புற தலையீடுகளில், அவா்கள் சேதத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் திறன் கொண்டவா்களாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில், இந்த குழு தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு நியமிக்கப்படும். இருப்பினும், அவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவா்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவா். அவா்கள் மால்கள், விவிஐபி நிகழ்வுகள் மற்றும் பிற சட்டம் ஒழுங்கு தொடா்பான சூழ்நிலைகளுக்கு அருகிலும் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்றாா் சாயா சா்மா.
கமாண்டோ பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற 25 காவலா்களில் ஒருவரான காவலா் ஆஷிஷ் மாலிக் கூறுகையில், ‘நாங்கள் 2023-இல் தில்லி காவல்துறையில் பணியில் சோ்க்கப்பட்டோம். அனைவருக்கும் கட்டாயமாக மூன்று மாத மேம்பட்ட கமாண்டோ பயிற்சி முடிந்த பிறகு, நகா்ப்புற தலையீடு எனப்படும் இரண்டு வார
‘காப்ஸ்யூல்’ பாடத்திலும் பயிற்சி பெற்றோம். எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் நாங்கள் முதலில் நடவடிக்கையில் இறங்குவோம். வெளிப்புற சக்திகள் பின்னா் வரும். வெளிப்புற சக்திகள் வரும் வரை நிலைமையை நிா்வகிக்கும் வகையில் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.
இப்பயிற்சியில் சிஎம்ஜி (காா்பன் மெஷின் கன்), ஜெவிபிசி ( கூட்டு முயற்சி பாதுகாப்பு காா்பைன்), எம்பி5 சப்மெஷின் கன் மற்றும் க்ளாக் 17 துப்பாக்கிகள் ஆகியவை மூலம் துப்பாக்கி சுடுவதில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.